கலம் : எழுதிய ஓலையைக் குறித்துவருவது. சிறுபான்மை பொருட்கலம் பற்றியும் வரும். நிலத்தது ஒற்றிக் கலம்; அரசனது பட்டோலை, சாத்தனது விலைத்தீட்டு எனவும், பாலது கலம் எனவும் வரும். இது பொருட் பிறிதின் கிழமை. |
முதல் : ஒன்றற்காக வகுத்துக் கொண்ட பொருள். அது வணிகரது முதல், ஒற்றியது முதல் எனவரும். இது பொருட் பிறிதின் கிழமை. |
ஒருவழியுறுப்பு : ஒருபொருளின் பகுதியாக ஒன்றி நிற்கும் உறுப்பு, யானையது கோடு - புலியது உகிர் - மரத்ததுகிளை - ஞாயிற்றினது கதிர் எனவரும். இனி ஒருவழியுறுப்பு என வரையாது கூறினமையின் யாதானும் ஒருவழியான் உறுப்பாக நிற்றலும் கொள்ளப்படும். அதுவருமாறு; அரசனது படை, நாட்டது அரண் - எனவரும். இவற்றுள் முன்னவை தற்கிழமை-பின்னவை பிறிதின்கிழமை. |
குழு : திரட்சி குறித்துநிற்பது. அஃது எள்ளது குப்பை, நெல்லது குவை எனவும், படையதுகுழாம்-பறவையது கூட்டம் - எனவும் வரும். இவற்றுள் முன்னவை ஒன்றுபலகுழுமியது. பின்னவை வேறுபலகுழுமியது. இவை தற்கிழமை. |
நிலை : ஒரு பொருளின் அப்பொழுதைய நிலையைக்குறித்து வருவது. சாத்தனது வளமை-கொற்றனது ஏழைமை, பூதனது இயலாமை எனவரும். இது தற்கிழமைப்பற்றி நிற்கும். |
தெரிந்து மொழிச் செய்தி : ஆராய்ந்து மொழியாற் செய்யப்படுதல். செய்தி = செய்யுள். இதனைச் செய்யுட்கிழமை என்றும் கூறுப. கபிலரது பாட்டு - கம்பரது காவியம் எனவும், முருகனது பிள்ளைத்தமிழ் எனவும் வரும். முன்னையவை தற்கிழமை, பின்னையது பிறிதன்கிழமை. |
வாழ்ச்சி : வாழ்தலாகிய செயல்பற்றிவரும். அது காட்டது யானை - குளத்தது தவளை - எனவும், யானையது காடு, தவளையது குளம் எனவும் வரும். இவற்றுள் முன்னவை உருபு தொக்க வழி ஏழாவதனொடு மயங்குமாறு பின்னர்க் கூறுவார். இவை பிறிதின் கிழமை. இவற்றுள் பின்னவை தற்கிழமைப் பொருட்டாகவும் கொள்ளப்படும் என்னை? யானையும் தவளையு மின்றேல் அவற்றிற்கு அப்பெயர் எய்தாமையின் என்க. |
திரிந்து வேறுபடுதல் : ஒருபொருள் திரிந்து வேறுவடிவம் பெற்று. நிற்றல். அது, கோட்டது நூறு, எள்ளது சாந்து என வரும். |