வினைசெய் இடம் என்றது புடைபெயர்ச்சியாகிய தொழில் நிகழாநிற்கும் நிகழ்ச்சியாகிய இடம். அது மழை பெய்தற்கண் காற்று வீசிற்று--புல்லுதற்கண் வியர்வை தோன்றிற்று-ஊடலின்கண் புலவி நேர்ந்தது எனவரும். நிலம் என்றது ; காலந்தவிர்ந்த ஏனைய காட்சிப் பொருளும் கருத்துப் பொருளுமாம். அது நிலத்தின்கண் பயிர் விளைந்தது, மலையின் கண் பனி படர்ந்தது, கடலின்கண் நாவாய் சென்றது, விண்ணின்கண் பருந்து பறந்தது எனவும், அறிவின்கண் உணர்வு தோன்றிற்று, உவப்பின்கண் தோன்றியது வாழ்த்து எனவும்வரும். காலம் என்றது : நொடி முதலாக ஊழி ஈறாக வரும் சிறுபொழுது பெரும் பொழுதுகளும் அவைகுறித்தபெயர்களு மாம். அது, ஒரு நொடிக்கண் வருவான். காலைக்கண் கதிர் எழுந்தது. தையின்கண் பிறந்தான். ஆதிரைக்கண் தோன்றினான். வேனிலின்கண் பூத்ததுமா - ஆண்டின்கண் நிகழ்ந்தது சிறப்பு. ஊழிக்கண் தோன்றியது வெள்ளம் எனவரும். |