124வேற்றுமையியல்

இங்ஙனம் பல்வகையாக வரும் வினைசெய் இடம் முதலியவை இடமாகக்
கருதிக் கொள்ளுமாறு வருதலின் "அனைவகைக் குறிப்பின்" என்றார்.
 

'கண்'    என்னும்   ஈரெழுத்தொருமொழி   விழியை உணர்த்துங்கால்
பெயராயும்; கருதுக என ஏவலை உணர்த்துங்கால் முதனிலை  வினையாயும்,
மதிக்கண்   மறு    என   வேற்றுமை  செய்யுங்கால் இடைச்சொல்லாயும்,
கண்ணகன் ஞாலம் என அடையாக வருங்கால் உரிச்சொல்லாயும் நிற்கும்.
 

இக்   கண்  என்னும்   உருபிடைச்சொல் ஏனைய உருபுகளைப் போல
இடுங்கித்    திரியாமற்    செஞ்சொல்லாக    அமைந்தது.   பவணந்தியர் "பொருள்முத லாறும்  ஓரிரு  கிழமையின் இடனாய் நிற்றல் இதன்பொருள்
என்ப"  என்றார். வேற்றுமை நிலைக்கும்  வேற்றுமைக்குரிய   பொருட்கும்
அவர் வேற்றுமை கருதிலர். மற்றும் வினை செய் இடத்தை அவர் சுட்டிலர்.
தொழிற்பெயருள்   அடங்கும்   என்பது  அவர் கருத்துப் போலும். காலம்
புணர்ந்து  நிற்கும் வினைச்சொல்லையும்   வினைப்பெயரையும்  ஒன்றாகக்
கோடல் ஒவ்வாமை யறிக. இடமும் இடத்தமரும் பொருளும் கிழமை  பற்றி
நிற்கும் என்பது  அவர் கருத்து. விண்ணின்கண் பருந்து  பறந்தது என்புழி
அது   விண்ணினது    பறவை  அல்லது பறவையது விண் எனக் கிழமை
கூறுதற்கு ஏலாமையறிக. பிறவும் அன்ன.
 

சூ.82: 

கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார் 
 

(21)
 
க-து :

"காப்பின்   ஒப்பின்"   என    இரண்டாவதற்கும் "அதனினியறல்
அதற்றகு      கிளவி"     என    மூன்றாவதற்கும்,    "அதற்கு வினையுடைமையின்    அதற்குடம்படுதலின்" என நான்காவதற்கும்,
"வண்ணம்     வடிவே"    என   ஐந்தாவதற்கும்,  "இயற்கையின் உடைமையின்"  என    ஆறாவதற்கும்  அவ்வேற்றுமையாதற்குரிய
பொருள்  வகைகளை விரித்தோதியாங்கு  அனைவகைக்குறிப்பாகிய
இடம் பற்றி வரும்  ஏழாவதற்குரிய  பொருள் வகையினை விரித்துக்
கூறுகின்றது.
 

உரை :கண்  முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும் அவைபோல்வன
பிறவும் ஏழாம் வேற்றுமைப்  பாலன என்று கூறுவர் ஆசிரியர். அதன்பால
என்றது அவ்வேற்றுமைக்குரிய இடப்பொருளின்  பால என்றவாறு. எனாஅ
என்பவை எண் இடைச்சொற்கள்.