இவை ஏழாவதன் பொருளாயின் ஊரைக் காத்தான், மண்ணின் இயன்ற குடம் என்புழி உருபின் பின் காத்தல், இயறல் என்னும் அப்பொருட்சொற்கள் விரிந்து வருமாறுபோலக் கண்கால் புறமகம் என்பவை கண்ணுருபின் பின்வரல் வேண்டுமன்றோ எனின்? அற்றன்று, நெல்லுக்கு உழுதான் என்புழி, அதற்கு வினையுடைமை என்னும் பொருள் உழுதான் என்னும் வினை காரணமாகவும், காட்டது யானை என்புழி வாழ்ச்சிப் பொருள் அச்சொற்களின் இயைபு காரணமாகவும் பெறப்படுமாறு போல ஊர்க்கண் செய் என்புழி அவ் இயைபினான் ஊர்ப்பக்கத்தின்கண் செய் உள்ளமையையும் ஆலின்கண் கிடந்தஆ என்புழி ஆலின் கீழ்ப்பகுதிக் கண் ஆ கிடந்தமையையும் புலப்படுத்து நிற்குமாதலின் அப்பொருட்சொற்கள் விரிந்து வரல் வேண்டுமென்பது யாப்புடைமையாகாதென்க. இனி ஊர்க்கால் நிவந்த பொதும்பர், அரசனுழை இருந்தான், என்புழிக் கால், உழை என்பவை இடத்தைத் தெளிவுபடுத்தி நின்றமையின் ஆண்டு உருபு விரிதல் வேண்டாதாதலையும் அறிக. |