அன்னபிற என்றதனான் வயின், வழி, மாட்டு, மருங்கு, பால், முதல், பாடு, அளை, திசை, வாய், உழி, உளி, இல் முதலியன கொள்க. இல் என்பது உள் என்னும் பொருட்டு. உழி உளி என்பவை அதன் ஒலித்திரிபான் வந்தவை. பிறவும் ஓர்ந்தறிந்து கொள்க. | ஓர் இடத்தினை முதல், இடை, கடை, அடி, நடு, முடி, அகம், புறம், பக்கம் எனப் பகுத்துணர்தலின் மேற்கூறிய கண் கால் முதலியவை அவற்றுள் ஒன்றனைச் சுட்டி நிற்குமாறு பின்வரும் எடுத்துக்காட்டுக்களான் அறிக. | வலக்கண் நின்றான் எனவும் ஊர்க்கால் இருக்கும் செய்யினை, ஊர்க்கட்செய் என்றும் ஊர்ப்புறத்து நிற்கும் மரத்தினை, ஊர்க்கண் உள்ள மரம் என்றும் எயிலகத்துப் புக்கானை எயிற்கட் புக்கான் என்றும் இல்லுள் இருந்தானை இற்கண் இருந்தான் என்றும் அரசனுழை இருந்தானை அரசன் கண் இருந்தான் என்றும் ஆலின் கீழ்க் கிடக்கும் ஆவினை ஆலின்கட்கிடந்த ஆ என்றும் மரத்தின் மேலிருந்த குரங்கினை மரத்துக்கண்குரங்கு என்றும் ஏர்ப்பின் சென்றானை ஏர்க்கட் சென்றான் என்றும் காட்டுச்சார் ஓடும் முயலினைக் காட்டின்கண் ஓடும் முயல் என்றும் உறையூர்க்கயல் நின்ற சிராப்பள்ளிக் குன்றினை உறையூர்க்கண் உள்ள சிராப்பள்ளி குன்று என்றும் எயிலின் புடை நின்றானை எயிற்கண் நின்றான் என்றும் மறையோர் தேஎத்துப் பயின்றானை மறையோர்கட் பயின்றான் என்றும் மனை முன் நின்றானை மனைக்கண் நின்றான் என்றும் அரங்கின் இடையிருந்தானை அரங்கின்கண் இருந்தான் என்றும் தேரின் தலைக்கண் உள்ள கொடியைத் தேர்க்கண் கொடி என்றும் வாயிலின் கடைநின்றானை வாயிற்கண் நின்றான் என்றும் அரசவையின் வலப்புறத்தும் இடப்புறத்தும் இருந்தாரை அரசவைக் கண் இருந்தார் என்றும் கூறப்படுதலின் அவை ஏழாவதற்குரிய இடப்பொருள் பயந்தவாறு கண்டு கொள்க. | 'அன்னபிற' என்பதனான் கொள்ளப்பெற்றவை, அவர் வயின் இருந்தான் - மரத்து நிழல் வழி நின்றான், அவர் மாட்டு உளது - அவர் மருங்கு இருந்தான் - கல்வியின் பால் அன்பு வைத்தான் - ஊரில் இருந்தான் - சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை - நம்பாடளையாத நாள் - கல்லளைச் சுனை நீர் - தேர்த்திசை இருந்தான் - குரைகடல்வாய் அமுதென்கோ - உறைப்புழி ஓலை போல - குளிர்காவுளி சேர்புறையும் எனவரும். |
|
|