என விரியும் வழிச், சாத்தன் பேசிய பேச்சு, நடந்தநடை என முடிக்கும் சொல்லை விளக்கி நிற்கும் சொற்களும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என வினைக்குறிப்புப்பட வருங்கால் எழுத்தினது இலக்கணம் அதிகரித்து நிற்றலை உடையது. சொல்லினது இலக்கணம் அதிகரித்து நிற்றலை உடையது எனப் பொருள் புணர்தற்குரிய பல சொற்களும் விரியும் எனக் கொள்க. இனிக் குன்றக் கூகை என்னும் ஏழாவதன் தொகையை விரிப்புழிக் குன்றின்கண் இருக்கும்கூகை, வாழும்கூகை, உறையும்கூகை எனவரும். இவற்றுள் வேற்றுமை உருபுகளும், முடிக்குஞ் சொல்லின் பொருள் விளக்கத்திற்கேற்பப் பல்லாறாகப் பொருள் புணர்ந்திசைக்கும் சொற்களும் விரிந்து நின்றவாறு கண்டு கொள்க. |
இனி, இவ்வேற்றுமைத் தொகை மொழிகள் வளைக்கை, மட்குடம் என்றாற் போல ஒன்றற்கே உரியதாய் நிற்றலன்றி மரவேலி - சொற்பொருள் என்றாற்போலப் பல வேற்றுமைகட்குப் பொதுவாயும் நிற்குமாகலின் அவ்வவ்வேற்றுமையைக் கருதுமிடத்து அவ்வவற்றிற்குப் பொருந்தும் சொற்களான் விரித்தல் வேண்டுமென்பது புலப்படப் "பொருள் புணர்ந்தி சைக்கும் எல்லாச் சொல்லும் உரிய" என்றார். |
வரலாறு : மரவேலி என்பது மரத்தானாகிய வேலி எனவும், மரத்திற்கு இட்ட வேலி எனவும் மரத்தினுடைய வேலி எனவும், சொற்பொருள் என்பது சொல்லானாகிய பொருள், சொல்லுக்கு ஏற்கும் பொருள், சொல்லினது பொருள், சொல்லின்கண் நிற்கும் பொருள் எனவும் வருமாறு காண்க. |
இவை மரமாகிய வேலி என்றும், சொல்லாகிய பொருள் என்றும் சொல்லும் பொருளும் என்றும் பிற தொகைகளாகவும் வரும். வரினும் ஈண்டு வேற்றுமைத் தொகைக்கே விரி இலக்கணம் கூறப்பட்டது என்க. பிறவும் ஓர்ந்து கொள்க. |
இனி இச்சூத்திரத்திற்கு உரிய கருத்தினை உரையாசிரியன்மார் ஓராற்றான் புலப்படுத்தினரேனும் உரை கூறுதற் கண் சூத்திர நோக்கிற்கும் நூல் நெறிக்கும் ஒவ்வாத விளக்கங்களைக் கூறிச் சென்றனர். அவற்றைச் சிவஞான முனிவர் எடுத்துக் காட்டி மறுத்துள்ளமை காண்க. அவர் மறுப்புரை ஏற்புடையதாயினும் இச்சூத்திரத்திற்கு அவர் கூறும் உரை பொருந்துமாறில்லை என்னை? |
வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை என்பதற்குப் பொருள், காப்பின் ஒப்பின் முதலாகக் கூறிய சொற்பொருள் |