பற்றிய பிற சொற்கள் என்றார். காப்பின் ஒப்பின் என்பவை வாய்பாடாதலின் பிற சொற்கள் என்பவை அவற்றுள் அடங்குதலின் கூறியது கூறலாம். பல சொற்களைத் தம்முள் அடக்கி நிற்றலின் வாய்பாட்டினைத் தொகை என ஆசிரியர் கூறியதாக விளக்குவது மயங்க வைத்தலாம். அதனின் இயறல் அதற்றகு கிளவி என்பவற்றின்கண் இறுதி நிற்கும் சொற்களே ஈற்று நின்றியல்வன என்பது மாறுபடக் கூறலாம். பிறவும் அவர் வலிந்து கூறுவன வெல்லாம் ஒவ்வாமையை ஓர்ந்து அறிக. |
வேற்றுமை இயல் முற்றியது. |
3. வேற்றுமை மயங்கியல் |
வேற்றுமையியலுள் உருபு பற்றியும் ஒவ்வொரு பொருள் பற்றியும் வேற்றுமைக்கு ஓதப்பெற்ற இலக்கணத்திற் சிதையாமல் அவை பிறிதொரு வேற்றுமை உருபொடும் பொருளொடும் மயங்கி வருமாறு கூறுதலின் இவ்வியல் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. இதனுள் வேற்றுமை மயக்கமேயன்றி ஏழுவகை வேற்றுமைக்கும் பொதுவாய சில இலக்கணம் பற்றியும் பிறமரபு பற்றியும் உருபுகளின் வடிவத்திரிபு பற்றியும் கூறப்படுதலின் இது மிகுதி பற்றிய குறியீடென்க. |
வேற்றுமை மயக்கம் என்பது உருபு மயக்கம், பொருள் மயக்கம் என இரு திறப்படும். அவற்றுள் உருபு மயக்கமாவது : தனக்குரிய பொருளிற்றீராமல் பிறிதொன்றன் பொருட்கண் சென்று மயங்குதலும் தம் பொருளிற்றீர்ந்து பிறிதொன்றன் பொருளாய் மயங்குதலும் என இருவகைத்தாய் நிகழும். பொருள் மயக்கமாவது : ஒரு பொருள் இரண்டு வேற்றுமைக்குப் பொதுவாக நின்று மயங்குதலும், ஒரு வேற்றுமைக் கோதிய பொருள் தன் பொருளிற்றீராது பிறிதொரு வேற்றுமை உருபொடு கூடி அவ் வேற்றுமைக்கண் சென்று மயங்குதலும் என இருவகைத்தாய் நிகழும். இம்மயக்கங்கள் தொகை மொழி, தொடர் மொழி ஆகிய இரண்டன் கண்ணும் வரும். அவை உருபு தொக்கு மயங்குதலும் விரிந்து மயங்குதலும் தனித்தனி மயங்குதலும் ஒருங்கு மயங்குதலும் எனப்பல நிலைகளாக வரும். அவற்றான் சொற்றொடர் அமைப்பின் பல்வேறு நிலைகள் புலனாகும். |
சூ. 84 : | கரும மல்லாச் சார்பென் கிளவிக்கு |
| உரிமையும் உடைத்தே கண்ணென் வேற்றுமை |
(1) |
க-து : | இரண்டாவதன் பொருளொடு ஏழாவது மயங்குமாறு கூறுகின்றது.
|