அஃதாவது அரசனது யானையைக் குத்தினான் என்புழி அரசன் குத்தப்படவில்லை என்பது புலனாகும். காரணம் பொருள் இரண்டும் வேறு வேறு ஆதலின். யானையது துதிக்கையை வெட்டினான் என்புழி வெட்டுப்பட்டது யானையே. யானையும் துதிக்கையும் வேறுவேறல்ல ஆதலின். அரசனைத் தேரின்கண் வெட்டினான் என்பதையும் யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என்பதையும் அவ்வாறே அறிகிறோம். யானையது கோடு என்னுமிடத்து யானையின் ஒரு பகுதியைச் சினையாகவும் ஏனையவற்றை முதலாகவும் கருதுகின்றோம். யானையது துதிக்கை என்றவழி முன்னர் முதற்பகுதியாக நின்ற துதிக்கைச் சினையாகவும் சினையாக நின்ற கோடு முதற்பகுதியாகவும் மாறி விடுகின்றது, ஆதலின், சுட்டி எடுத்துக் கொண்ட பொருளை முதலாகவும் அதன் பகுதிகளைச் சினையாகவும் கருதுகின்றோம். மேலும் யானை என்னும் ஒருபொருளை முதலாகக் கருதுங்கால் அதன் பகுதிகளாகிய தலை உடல் கால் துதிக்கை ஆகியவற்றைச் சினையாகவும், துதிக்கையை முதலாகக் கருதுங்கால் அதன், பகுதியாகிய இடை, கடை, நுனி, பக்கம், துளை, புள்ளி ஆகியவற்றைச் சினையாகவும் கூறுகின்றோம். |