தமிழோடு ஒத்த இடங்களில் வடமொழி மரபை ஏற்றுக் கோடலிற் குறை ஒன்றும் இல்லை. இவ்வுரையாளரும் வடமொழி மரபை ஒட்டியமைந்த இரண்டாம் வேற்றுமை பகுப்புக்களாகிய நிவர்த்தியம், விகாரியம், பிராப்பியம் என்பனவற்றின் மொழி பெயர்ப்பாகிய, இயற்றப்படுதல், வேறுபடுத்தப்படுதல், எய்தப்படுதல் என்பனவற்றை ஏற்றுச் சுட்டியுள்ளார்.18 |
சூ. 73:ஒரே அடியில் உள்ள முதல் என்ற இரு சொற்களில் ஒன்று அடிப்படை என்ற பொருளையும் மற்றது காரணம் என்ற பொருளையும் குறிப்பிடுமாறு ஆசிரியர் மயங்கவைப்பாரா என்பது ஐயமே. 'வினை நிகழ்தற்கு அடிப்படை கருவியாகிய அந்தக் காரணத்தை உடையது' என்ற புத்துரை ஆராய்தற்குரியது. தானே எழுவாயாக வரும் முதல் வேற்றுமைக் கருத்தாவிற்கும் செயப்படுபொருள் எழுவாயாக வரும்போது மூன்றன் உருபுபுணர்ந்து வரும். மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவிற்கும் வேறுபாடு உண்டு. ஆதலின் கருத்தாப் பொருள் இருவேற்றுமைக்கண் மயங்குதலின்று. |
கோயில் தச்சனால் கட்டப்பட்டது-துணைக்கருவி. கோயில் அரசனால் கட்டப்பட்டது-நிமித்த கருவி என்கிறார் இவர். 'கருவியாவது வினை முதல் தொழிற்பயனைச் செயப்படுபொருட்கண் உய்ப்பது' இவ் இலக்கணம் இவற்றிற்கு இன்மை உணரத்தக்கது. வடமொழியாளர் "கர்த்ரு கரணயோ த்ருதீயா" என்று கூறுவதைப்போலத் தொல்காப்பினார் "வினைமுதற் கருவி அனைமுதற்று" என்று குறிப்பிடுவதை வலிந்து மாற்றுவதன்கண் சிறப்பில்லை. |
சூ. 74:"இன்னான் ஏது ஈங்கென வரூஉம்" இன்னவன் என்று உறுப்புப்பற்றி வருவது. இன்னான் என்பது காரணப் பொருளில்வருவது. ஏது என்பது இப்படியே என்னும் பொருளில் வருவது. ஈங்கு என்பது இம்மூன்று பொருள்பற்றியும் மூன்றாவது வரும் என்பதே நேரிய பொருள். ஈங்கு என்பது இப்படியே என்ற பொருளில் வருதல் "முழவுத்தோளான் முறுவலித்து ஈங்கே இரு என்று (சிந்-1593) பேதை நெஞ்சம் கவலை கவற்ற ஈங்கு ஆகின்றால் (நற்-144) முதலியவற்றான் அறியப்படும். |
|
18. சூ. 63, 64, 73, 74 முதலிய சூத்திரக் கொள்கைகள் தமிழியற் கோட்டுபாட்டு விளக்கத்தில் விளக்கம் பெறும். ஒரு மொழியின் தனித்தன்மை வேற்றுமை பற்றிய இலக்கணத்தான் அறியப்படும். |