யேநாங்க விகார:அக்ஷ்ணாகாண:   இன்னான்-கண்ணாற்   கொத்தை.
ஹேதௌ -  புண்யேநத்ருஷ்டோஹரி -  ஏது  அறிவாற்பெரியன்  இத்தம்
பூதலக்ஷ்ணே   -   ஜடாபிதாபஸ:   ஈங்குச்   சடைமுடியான்    முனிவன்
(வடமொழியிற்  கூறப்படும்)  இச்செய்திகள் யாவும் தமிழிற்கும் உரியனவே.
வடமொழியில்  இருப்பனவற்றைப்  பொருந்துமிடத்து   ஏற்றலே   தக்கது.
ஆதலின்  இன்னான்   ஏது   ஈங்கு  என்பன   மூன்றன்   பொருளாகக்
கொள்ளப்படுதற்கண்  இழுக்கின்று.  இன்  என்பது மூன்றாவதன் மாற்றுருபு
என்பது  ஆராய்தற்குரியது. அங்ஙனம் பல நூற்பாக்களுக்கு இவ்வுரையாளர்
குறிப்பிடும் உரையும் ஆராய்தற்குரியன.
 

சூ. 77:'இதனின்  இற்றுஇது'  -  இதன்   பொருள்  மயக்கந்தருவதே.
இப்பொருளினின்று  இத்தன்மைத்து  இப்பொருள்.  அஃதாவது வேற்றுமை
ஏற்ற  சொல்  ஓர்  அளவையாக - எல்லையாக  நிற்றல் (பக்-114) இதனின்
இற்று இது  எனவரும் உறழ்ச்சியாகிய  அளவை  ஐந்தன் பொருள் (பக்-10)
இவ்வாறு  அளவை  என்ற  பெயரான்  நீக்கப்   பொருளையும்   ஒப்புப்
பொருளையும் இவ் உரைகாரர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியனார் விரித்துக்
கூறாத  எல்லைப்  பொருளை  எடுத்தோத்தினான்  அடக்கினார் என்றார்.
ஏதுப்  பொருளையும்  எல்லையுள்  அடக்குதற்கண் சிக்கல் ஏதும் இல்லை.
கல்வியிற் பெரியன் கம்பன் - கல்வி  என்ற ஏதுப் பொருளை எல்லையாகக்
கொண்டு கம்பன்  பெருமை  புலப்படுத்தப்படுகிறது.  ஐந்தாவதற்கு நீங்கல்,
ஒப்பு, எல்லைப் பொருள்களை  ஓராற்றான் கொள்ளும் உரைகாரர் ஏதுவை
ஐந்தாவதற்கு  ஏலாது மூன்றன் மாற்றுருபாகிய இன் என்பதன் பொருளாகக்
கொண்டதனால்   பலநூற்பாக்களுக்கு   வேற்று   விளக்கந்தரும்   நிலை
ஏற்பட்டுள்ளது. (சூ. 104-கொள்க)
 

சூ. 110:இம்  மகளுக்குத்  தாய்  இது - இம்மகளது  தாய்  இது  என
அஃறிணைக்கண்  முறைக்கொண்டெழுந்த  பெயர்நிலைக்  கிளவி ஈருருபும்
பெறும்  என்றும் - உயர்திணைக்கண்  இம் மகளுக்குத்  தாய் இவள் என்ற
நான்கனுருபே   பெறும்   என்றும்   குறிப்பிடும்    உரையாளர்   அஃது
அஃறிணைப்பால்  தோன்ற  நிற்றலின்   உயர்திணை  முறைப்பெயர்க்கண்
குகரம்  விரித்தார்  என்ற  கருத்தை  (பக்-138)   ஒவ்வாததன்   காரணம்
புலப்படவில்லை.19 


19. உருபு பால்காட்டுமெனக் கோடல் எனக்கு உடன்பாடில்லை.