பல்லோர்க்குறித்த திணைநிலைப் பெயராவன : பன்மை பற்றித் திணைகாரணமாக வரும் பெயர் - திணை என்றது கைக்கிளை முதலாய ஏழும், அவற்றின் புறத்திணைகளுமாம். இவற்றுள் குறிஞ்சி முதலாய ஐந்தும் நிலத்திற்கும் பெயராக வருதலின் குறிஞ்சியான், முல்லையான் எனவருவன நிலப்பெயர் என்பதன்கண் அடங்கும், ஆயர், வேட்டுவர் என்றாற் போல வருவன திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயர் எனப்பின்னர்க் கூறுவாராகலின் அவை மரபு பற்றிய திணைப் பெயராய் அடங்கும். அவை ஒழிந்த ஏனையவை ஈண்டுக் கொள்ளப்படும். | இனிக் கைக்கிளையும் பெருந்திணையும் குறிஞ்சி முதலிய அகனைந்திணைக்கும் அகப்புறமாய் அவற்றிடையே தோன்றி நிகழ்தலான் அவைபற்றிப் பெயர் ஆக்கம் உறுதலில்லை. அவற்றின் புறனாகிய பாடாண்டிணைக்கும் காஞ்சித்திணைக்கும் இஃதொக்கும். எனவே, திணை நிலைப் பெயராய் வருதற்குரியவை வெட்சியும், அதற்குமாறாகிய கரந்தையும், வஞ்சியும், உழிஞையும், அதற்குமாறாகிய நொச்சியும்; தும்பையும், வாகையுமாகிய ஏழுமே என்பது பெறப்படும். அவை வெட்சியார், கரந்தையார், வஞ்சியார், உழிஞையார், நொச்சியார், தும்பையார், வாகையார் எனவரும். | இனி வெட்சியான், கரந்தையான் என ஒருமைக்கும் வருமால் எனின் ? அவை அத்திரளுள் ஒருவன் என்னும் பொருள் பட நிற்றலின் குழுவின் பெயர் என்பதற்கு இனமாய் அடங்குமென்க. இம்மூவகைப் பெயர்களுள் முன்னவை ஒருமை பற்றிவரின் விரவுப் பெயராம் ஆதலானும் பின்னது குழுவின் பெயராம் ஆதலானும் பல்லோர்க்குறித்த என விதந்து ஓதினார் என்க. | கூடி வருவழக்கின் ஆடியற் பெயராவன : இளையோர் தம்முள் விளையாடுதற்கண் குழூஉப்படப் பிரிந்து அவ்வப்போது அமைத்துக் கொள்ளும் பெயர். ஆடியல் வழக்கின் வருபெயர் என்க. அவை வருமாறு : கடலைக்கையான் முகப்பவர், மணலைக்கயிறாகத் திரிப்பவர், விண்ணை அளப்பவர், மலையை உகிராற் பிளப்பவர் என்றாற்போல வரும். இவை பெயரினாகிய தொகையாய் வந்து ஒருசொல் நீர்மையவாக நிற்பன என அறிக. | உரையாசிரியன்மார், பட்டிபுத்திரர், கங்கை மாத்திரர் எனக் காட்டுப. இதற்குத் தெய்வச்சிலையார் கூறும் விளக்கமும், காட்டும் பொருந்தாதனவாகும். இவற்றுள் பொருந்துமாற்றான் ஒருமைப் பெயராய் வருவனவும் கொள்க. |
|
|