பெயரியல்193

இன்றிவர் என்னும்  எண்ணியற் பெயராவன  :-  இவ்வளவினர்   என
எண்ணான்  இயன்றுவரும்.   பெயர்களாம்.  அவை,   ஒருவன்,  ஒருத்தி,
இருவர், மூவர்,   நால்வர்,  பன்னிருவர்,  முப்பத்து   மூவர்,   நூற்றுவர்,
நாற்பத்தெண்ணாயிரவர் என்றாற்போல வருவனவாம்.
 

பொருளான் வேறுபட்ட  பல்வகைப் பெயர்கள் நிலம், குடி முதலிய ஓர்
அடிப்படையுள்  ஒன்றுபட்டு இனமாய்   நிற்றலின்   இவற்றைப்   பிரித்து
வேறு கூறினார் என்க.
 

ஒப்பொடுவரும்  கிளவியும்   ஓரினமாக வருமேனும் இவை உவமஉருபு
பற்றியும் பொருள் பற்றியும்   வெவ்வேறு   முதனிலைகளொடு  வருதலின்
முதனிலை வேறுபட்டு வரும் பெயர்களொடு வைத்தார் என்க.
 

சூ. 167 :

அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே

(12)
 

க-து :

உயர்திணைப் பெயர்பற்றிப் புறனடை கூறுகின்றது.
 

உரை : மேற்கூறப்பெற்ற   பெயர்களை   ஒப்பவருவனவும்  பிறவுமாய்
உயர்திணையிடத்து   ஒருமையும்   பன்மையுமாகிய   பால்  விளங்கவரும்
எவ்வகையான பெயர்களும் உயர்திணைக்குரியவையாம்.
 

அவற்றுள் சிலவருமாறு :-  ஏனாதி,   காவிதி,  அமைச்சன்,  மன்னன்,
ஒற்றன்:  தூதன், வாயிலான்,   அடியான்,   பிறன்,   மற்றையான்,  எமன்,
நுமன்  என்றாற்போல்வன.  இவற்றைப் பொருந்துமாற்றான்  மகடூஉவிற்கும்
பல்லோர்க்கும் ஆக்கிக் கொள்க.  இனி  எல்லேம்,  வல்லேம்,  ஒருவேம்,
இருவேம்,  பலவேம்  என வருவன   "கடிசொல்  லில்லை"  என்பதனாற்
கொள்க. 
 

இச்    சூத்திரங்களான்   உயர்திணைச்   சொற்கள்  இவ்வாறு  வரும்
என்றதன்றி   உயர்திணைக்குரிய   முப்பாற்   சொற்கள்  இவை  என்பது
உணர்த்துதல்   ஆசிரியர்   கருத்தன்மை "பன்மையும் ஒருமையும்  பாலறி
வந்த" என்பதனானும் "அத்திணை யவ்வே" என்பதனானும் விளங்கும்.