அவை இறந்தகாலத்தொடு வருமாறு : எ-டு : உண்டனம் - உண்டாம், உண்டெனெம் - உண்டேம், உண்டனேம், டகரம் இறந்தகாலம் காட்டிற்று. தகரம் தானே மிகுந்தும் தன்கிளை எழுத்து மிகுந்தும் உரைத்தனம் - வரைந்தனம். உரைத்தாம் - வரைந்தாம், உரைத்தனெம் - வரைந்தனெம் உரைத்தேம் - உரைத்தனேம், வரைந்தேம் - வரைந்தனேம் எனவரும். உகர ஈற்றுச் சொற்கள் கலக்கினம், தெருட்டினம் எனவும். உரிஞ்சினம், திருமினம், பொருநினம் எனவும் வரும். ஈரெழுத்தொரு மொழியாக வரும் முற்றுகர ஈற்றுச் சொற்கள் இடையே ஒற்று இரட்டி உற்றனன் - உற்றான், நக்கனன் - நக்கான், புக்கனன் - புக்கான், விட்டனன் - விட்டான் எனவரும். சிறுபான்மை கொடுத்தனன், சிறுத்தனன் எனப் பொதுவிதியொடும் வரும். இவற்றை ஏனைய இறுதிகளொடும் ஒட்டிக் கண்டு கொள்க. றகர ஒற்றுத் தின்றனம் தின்றாம். தின்றனெம் - தின்றனேம், தின்றேம் எனவரும். இன் இடைச்சொல், போயினம் - கூயினம், போயினாம் கூயினாம், போயினேம் - கூயினேம் எனவரும். இவற்றுள் யகரம் உடம்படுமெய்யாகிய உருபு. தாவினம், மேவினம் என வகர உடம்படுமெய்யொடும்வரும். |
அவை நிகழ்காலத்தொடு வருமாறு: உண்ணா நின்றனம், உண்கின்றனம், உண்ணா நின்றனெம், உண்கின்றனெம் உண்ணாநின்றனேம், உண்ணாநின்றேம், உண்கின்றனேம், உண்கின்றேம் எனவரும். |