அவை எதிர்காலதொடு வருமாறு: உண்பம் - உண்பாம், உண்பெம் - உண்பேம், வருவம் - வருவாம், வருவெம் - வருவேம் எனவும் உண்குவம் - தின்குவம், உண்ணுவம் - தின்னுவம் எனவும் பாடுகம் - நகுகம் எனவும் வரும். |
உம்மொடு வரும் கடதறக்கள் எதிர்காலம் பற்றி வரும். ஒருசார்சொற்கள் உகரச்சாரியை பெற்றும்வரும். எ-டு : உண்கும், காண்டும், வருதும், சேறும் எனவும் உரிஞுதும், திருமுதும், பொருநுதும் எனவும் வரும். ககரம் இறந்தகாலத்திற்கும் உரியதாமெனக் கொண்டு நக்கனம், நக்காம் என உதாரணங்காட்டுவர் உரையாளர். நக்கனம் என்பதன்கண் நக் முதனிலையாகாமையின் அது பொருந்தாமையறிக. |
இனி உண்டும், வந்தும், சென்றும் என டும், தும், றும் என்பவை இறந்தகாலங்காட்டும் என்பார் பவணந்தியார். அங்ஙனம் வருதல் சான்றோர் செய்யுட்கண் காணப்பெறாமையின் அவை ஆய்வுக்குரியனவாம். |
காலங்காட்டும் இடைச்சொற்கள் பற்றிய வரலாறு: இறந்த காலமுணர்த்தும் டகர றகரங்கள் தகரத்தின் திரிபேயாம். 'தகரம்' தொல் என்னும் உரிச்சொல்லின் இடுங்கிய வடிவமெனக் கருதலாம். இன் என்பது இற்றல் என்னும் சொல்லின் முதனிலை இடைச்சொல்லாகக் கொள்ளப்பட்டதெனலாம். நிகழ்காலமுணர்த்தும் ஆநின்று - கின்று என்பனவற்றுள் ஆநின்று, என்பது ஆகநிற்றல் என்பதன் மரூஉவாகவும், கின்று என்பது கிற்றல் என்பதன் திரிபாகவும் கொள்ளலாம். எதிர்காலமுணர்த்தும் பகர வகரங்கள் புகல், வரல் என்னும் முதனிலைகளின் சுருங்கிய குறியீடுகளாகக் கருதலாம். |
சூ. 204 : | கடதற என்னும் |
| அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு |
| என்ஏன் அல்என வரூஉம் ஏழும் |
| தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே |
(6) |
க-து : | தன்மை ஒருமைவினைச் சொல் வருமாறு கூறுகின்றது. |
|
உரை : கடதற என்னும் மெய்களை ஊர்ந்து நின்ற குற்றுகரத்தை ஈறாகவுடையனவாகவும் என் ஏன் அல் என்னும் ஈற்றவாய்வருவனவுமாகிய ஏழும் ஒருமை உணர்த்தி வரும்தன்மை வினை உயர்திணைச் சொற்களாகும். |