கடதற ஊர்ந்த குற்றியலுகரமாவன: குடுதுறு என்பனவாம். தனிவினை உரைக்கும் என்பது எதுகை நோக்கித் தன்வினை என விகாரமாய் நின்றது. தனிமை-ஒருமை. குன்றியலுகரமென்றதும் செய்யுள் விகாரமாம். உம்மொடு வரூஉம் கடதற என மேல் அதிகரித்து நின்றமையின் அவற்றை முற்கூறினார். |
நால்வகைக் குற்றுகர ஈறும் அல்லீறும் எதிர்காலம் பற்றி வரும். என், ஏன் என்பவை மூன்று காலமும் பற்றி வரும். இவை சாரியை பெற்று வருதலும் கால இடைநிலைபெற்று வருதலும் மேற்கூறியாங்குக் கொள்க. அஃதாவது உகர ஈறு உம்மீற்றொடும் என் ஈறு, எம் ஈற்றொடும் ஏன் ஈறு, ஏம் ஈற்றொடும் ஒக்கும். |
உண்டு, வந்து, சென்று என டுதுறு என்பவை இறந்த காலங்காட்டும் என்பார் பவணந்தியர். அவை முற்றுப் பொருளில் சான்றோர் செய்யுட்கண் காணப்பெறாமையான் அவை ஆய்வுக்குரியனவாம். |
எ-டு :உண்கு (உண்பேன்) கொண்டு (கொள்வேன்) வருது (வருவேன்) சேறு (செல்வேன்) எனவும், காண்பல், கொள்வல் எனவும் வரும். காண்குவல் எனச் சிறுபான்மை உகரச் சாரியையொடும் வரும். அல் ஈறு வருமொழி மெல்லினம் நோக்கி னகரமாகத் திரிந்து நின்றமையை [காண்பல் மற்றம்ம - காண்பன் மற்றம்ம] ஓராது 'அன்' என்பதும் தன்மைக்கண்வரும் என இடைக்காலத்தார் தவறாகக் கொண்டனர். அதுபற்றி வழி நூலாரும் இலக்கணமாக்கிக் கொண்டனர். அதனான் "இலென்" என்று தீயவை செய்யற்க. (குறள்-205) உளெனாவென்னுயிரை உண்டு (கலி-22) என நின்ற சான்றோர் பாடங்களும் திருத்திக் கொள்ளப்பட்டன என்க. பாடந்தவறு எனக் கருதாமல் அதற்கு அமைதி கூறினர் உரையாசிரியன்மார். என் ஈறு, உண்டனென்- உண்ணாநின்றனென் - உண்பென் எனவும் வரும். ஏன் ஈறு உண்டேன், (உண்கிறேன் என்பது சேரி வழக்கு). உண்பேன், செல்வேன், உண்குவேன், செல்குவேன் எனவரும். |
சூ. 205 : | அவற்றுள் |
| செய்கென் கிளவி வினையொடு முடியினும் |
| அவ்வியல் திரியாது என்மனார் புலவர் |
(7) |
க-து : | மேலனவற்றுள் ஒன்றற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. எத்திறத்தானும் பெயர் முடிபினவே (எச்ச-33) என்பதனை நோக்கிய புறனடை எனினுமாம். |