ஈற்றிடைச் சொல்லான் வேறுபட்டு வருதல்போல, வியங்கோட் கிளவி பொருள் விரியுமிடத்து ஈறுவேறுபடாது யான் வாழ்க, நீ வாழ்க, அவன் வாழ்க எனப்படர்க்கைச் சொல்லாயே நிற்கும் என்றவாறு. |
வந்தேன் வந்தாய் வந்தான் என ஏனை வினைமுற்றுக்கள் எழுவாய் குன்றிவரினும் தம்வடிவான் இடமுணர்த்தி நிற்பதையும்; வளர்க ! பொலிக ! வாழ்க ! என்னும் வியங்கோள்வினை எழுவாயின்றித் தன் வடிவான் இடமுணர்த்தி நில்லாமையும் நோக்கி அது சொல்லமைப்பினாற் படர்க்கைச் சொல்லே என்பதை உணர்த்துவான் வேண்டி "முன்னிலை தன்மை ஆயீரிடத்தொடும் மன்னா தாகும்" என அதன் இயல்பு கூறினார் என்க. |
அங்ஙனமாயின் செய்ம்மன என்னும் முற்றுச்சொல்லும் ஐம்பால் மூவிடத்தினும் ஈறுதிரியாமல் வருதலின் அதனைவிதந்து கூறாதது என்னை எனின்? செய்ம்மன என்னும் சொல் ஈறுதிரியாது நிற்பினும் யான் உண்மன நீயுண்மன அவனுண்மன என்பவை பொருள்விரியுங்கால் யானுண்பேன், நீயுண்பை அவனுண்பான் என விரியும். யான் வாழ்க, நீ வாழ்க, அவன் வாழ்க என்னும் வியங்கோட்கிளவி பொருள்விரியுங்கால் யான் வாழ்வேனாகுக ! நீ வாழ்வாயாகுக ! அவன்வாழ்வானாகுக ! என (ஆகுக) படர்க்கைக்குரியவாயே விரிதலன்றி யான் வாழ்வேன் நீ வாழ்வாய் அவன்வாழ்வான் என விரியாமையின் என்க. |
மற்று வியங்கோட்கிளவி ஐம்பால் மூவிடத்திற்கும் உரியவாய் வருமென்பதனான் எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய எனப் பொதுவிதி கூறி அது, சொல்வடிவான் படர்க்கை இடத்ததாயே நிற்றலை ஓர்ந்து அதன் சிறப்புத் தன்மையைச் சுட்டி முன்னிலை தன்மை ஆயீரிடத்தொடும் மன்னாதாகும் என்றார். (மன்னுதல் சொல்வடிவான் நிலை பெறுதல்) அன்றேல் இதனை எஞ்சிய கிளவி என்னும் சூத்திரத்திற்கும் முன்னர் வைத்து ஓதியிருப்பார் என்க. எனவே வியங்கோட்கிளவி சொல்லாற் படர்க்கைச் சொல் என்பதும் வியங்கொள்ளுதற்கண் ஐம்பால் மூவிடத்திற்கும் வந்துவிரவும் என்பதும் புலனாம். |
தமிழ்மொழி அமைவினையும் தொல்காப்பிய நெறியினையும் ஊன்றிக் காணாமல் உரையாசிரியன்மாரும் இடைக்கால நூலாரும் இக்கால ஆய்வாளரும் தத்தமக்குப் பட்டவாறெல்லாம் விளக்கங் கூறுவாரும் அமைதி கூறுவாருமாயினர். அவர் தம் கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்துரைக் கப்புகின் விரியுமாதலின் மாணாக்கர் ஊன்றி நோக்கி உண்மையுணர்க. |