ஆகிவரின் வினைச்சொல்லாம். அஃதாவது; உண்ணுதல் என்னும் சொல் அத்தொழிலை உணர்த்தி நிற்குமளவில் அது தொழிற் பெயர், அஃது ஒருவினைமுதலின் தொழிலாகிக் காலத்தொடுபுணர்ந்து சாத்தன் உண்டான், உண்ணாநின்றான் உண்பான் எனவரின் வினைச் சொல்லாம். |
அவ் வினைமுதல் உண்ணுதல், உறங்குதல் எழுதல், வருதல் எனப்பல தொழில்களைச் செய்திருப்பின் சாத்தன் உண்டான், சாத்தன் உறங்கினான், எழுந்தான், வந்தான் என வரும். இவையாவும் சாத்தன் தொழில்களேயாதலின் அவற்றை ஒருங்கு கூட்டி ஒருதொடராகக் கூறுங்கால், சாத்தன் உண்டு உறங்கி எழுந்து வந்தான் எனவரும். இத்தொடருள் வந்தான் என்பது தவிர ஏனையவை ஈறுகுறைந்து எச்சமாய் நிற்றலைக் காணலாம். அவ்எச்சங்கள் உண்டு உறங்கி எழுந்து எனத் தனியே நிற்குமிடத்துக் காலந்தவிரத் திணை பால் இடம் ஆகியவற்றைக் காட்டாமல் வந்தான் என்பதனொடு முடிந்தவழிக் காட்டி நிற்பதையும் அறியலாம். |
உண்டு முதலியவை வந்தான் என்னும் முற்றுவினையுள் வருதல் தொழிலை அவாவாமல் ஆன் என்னும் பால்காட்டும் ஈற்றிடைச்சொல்லையே அவாவி நின்றன. எனினும் அவ்ஈறு அவ்வினைப்பகுதி (வருதல்) யொடு கூடி நின்றல்லது திணை முதலியவற்றைக் காட்டும் ஆற்றலுடையதன்றாகலின் முழுமையாக அவ்வினை முற்றுச் சொல்லை அவாவி நின்றது எனக்கூறுதல் இலக்கண மரபாகும். |
பெயரெச்சம் : ஒருவினைமுதல் என்னென்ன செய்தது என்பதை நோக்கிக் கூறுதல் வினையெச்சத்தின் இலக்கணமாகும். அவ்வாறின்றி இன்னின்ன தொழிலைச் செய்த வினைமுதல் யாது என்பதை நோக்கிக் கூறுதல் பெயரெச்சத்தினியல்பாகும். அஃதாவது உண்டவன் சாத்தன், உறங்கினவன் சாத்தன், எழுந்தவன் சாத்தன் எனக் கூறுதல். இவற்றை ஒரு தொடராக்குதற்கண் உண்ட உறங்கின எழுந்த சாத்தன் எனவரும். |
இவற்றுள் உண்ட முதலிய குறைச் சொற்கள் சாத்தன் என்னும் பெயர்க்கண்உள்ள 'அன்' என்னும் பால்காட்டும் ஈற்றிடைச் சொல்லை அவாவி நின்றன. எனினும் அவ் ஈறு அப்பெயரொடு கூடியல்லது திணை முதலியவற்றை உணர்த்தும் ஆற்றலுடையதன்றாகலின் முழுமையாக அப்பெயர்ச் சொல்லை அவாவி நின்றதெனக் கூறுதல் இலக்கணமரபாகும். |