வினையியல்253

இனி,  இவ்இருவகை எச்சங்களும் சென்று முடியும்  சொற்கள் அவற்றை
முடிக்குஞ் சொற்களாகும். இரண்டற்கும்   எழுவாய்   பெயராகவே நிற்கும்.
வினையெச்சத்திற்கு   வினைச்சொல்   பயனிலையாயும் பெயரெச்சத்திற்குப்
பெயர்ச்சொல்   பயனிலையாயும்  நிற்கும்.   அஃதாவது, சாத்தன்  உண்டு
வந்தான்.    இவன்    உண்ட     சாத்தன்    எனவரும்.      எனவே
பெயரெச்சத்தொடர்க்கு எழுவாய் சுட்டுப்பெயர், வினாப் பெயராயே நிற்கும்.
வினையெச்சம்  முற்றாங்கால்  வினைச்சொல்லாக  முற்றும்.   பெயரெச்சம்
முற்றாங்கால் பெயராக  (வினையாலணையும்  பெயராக) முற்றும்  என்பதை
அறிதல்  வேண்டும்.  அதனான் வினையெச்சம்  என்பது  வினைமுற்றினது
குறையாயும் பெயரெச்சம்  என்பது பெயரினது (வினையாலணையும்  பெயர்)
குறையாயும் நிற்கும்   என்பது   தோன்ற   வினையெஞ்சு கிளவி என்றும்,
பெயரெஞ்சு கிளவி என்றும் இரட்டுறமொழிதல் என்னும் உத்தியாற் குறியீடு
செய்தார் ஆசிரியர்.
 

இங்ஙனம் வினை ஒழிபாகவும்  பெயர்  ஒழிபாகவும்   நின்ற   குறைச்
சொற்கள்   தம்மை   முடிக்கும்   வினைச்சொல்  பெயர்ச் சொல்லுக்குரிய
கருத்தாவின் செயல்களேயாதலின் அவையாவும் முற்றிய சொற்களாயமைந்து
பின்னர்க்  குறைக்கப்பட்டவை என்பதும் புலனாகும். அவ்வாற்றான் முற்றுச்
சொற்களே எச்சமாகும் என்பதனை அறியலாம்.
 

உண்டு     தின்று    என்னும்   குறைச்சொற்களே    அன்   ஆன்
முதலியஇடைச்சொற்களோடு கூடி முற்றி நிற்கும் எனச்  சொல்  வடிவத்தை
அடிப்படையாகக் கொண்டு  எச்சமே  முற்றாக   மாறும் என்பாரும் உளர்.
உண்,   தின்   முதலாய   முதனிலைகள்   ஒருவினை    முதலானன்றிக்
காலத்தொடுபுணரா   என்பதையும்  அவ்வினைமுதல்அத்தொழிலைப்பற்றிய
அளவில் அது வினைச் சொல்லாய் நிறைதலையும்அவர் ஒர்ந்திலர்.
 

'முற்று', 'எச்சம்', என்பவை  தொழில்  முற்றுப்  பெற்று   நிற்றலையும்
முடியாது  நிற்றலையும்    பற்றியவை  அல்ல. சொற்பொருள்   பற்றியவை
என்பதை  உண்பான்,  உண்ணான்    என்னும்   எதிர்கால வினையானும்
எதிர்மறை வினையானும் அறிக. இவற்றுள் தொழில்   நிகழாமைதேற்றமாம்.
அவ்வாற்றான்   இவ்இருவகை   எச்சமும் முற்றுச்  சொல்லின் திரிபுகளாய்
வகைப்பட்டனவன்றி வினைச் சொற்களின் வகையாகாமை உணர்க.
 

முற்றி நிற்பதும்  எஞ்சி  நிற்பதும்   பால்  முதலியவற்றை உணர்த்தும்
ஈறுகளேயாதலின் ஆசிரியர் செய்து செய்யூ