254வினையியல்

செய ......... செயற்கு எனவும் (செய்யும்) செய்த எனவும் ஈறு குன்றியுள்ளமை
தெற்றெனப் புலப்படும் வாய்பாடுகள் வாயிலாக அவற்றின் இலக்கணங்களை
ஓதுவாராயினார் என்க.
 

மொழியியல்பும் தொல்காப்பிய  நெறியும்  ஓராத வழி நூலாசிரியன்மார்
இவ்   எச்சங்களை  வினைச்சொல்லின்   வகையாகக்   கூறிச்  சென்றனர்.
பவணந்தியார், "அவைதாம், முற்றும்  பெயர்  வினை  எச்சமுமாகி ஒன்றற்
குரியவும்   பொதுவு   மாகும்"  (நன் - 322)  என்றும் "காலமும் செயலும்
தோன்றிப்  பாலொடு செய்வதாதி  அறுபொருட்   பெயரும்  எஞ்ச நிற்பது
பெயரெச் சம்மே" (நன் - 340)  என்றும் "தொழிலும்  காலமும்  தோன்றிப்
பால்வினை  ஒழிய  நிற்பது   வினையெச்   சம்மே" (நன் - 342) என்றும்
கூறிப்போந்தோர். அவை  இடமும் உணர்த்தா என்பதைக் கருதினாரில்லை.
பிற வேறுபாடுகளையும் விரிக்கின் பெருகும்.
 

சூ. 230 :

பின்முன் கால்கடை வழிஇடத் தென்னும்

அன்ன மரபிற் காலங் கண்ணிய

என்ன கிளவியும் அவற்றியல் பினவே

(32)
 

க-து :

ஈறுபற்றி   வரும்   ஒருசார்  வினையெஞ்சு கிளவிகள் வருமாறு
கூறுகின்றது.
 

உரை :  பின்   முன்  கால் கடை  வழி இடத்து என்னும் அத்தகைய
மரபினான் காலத்தைக் கருதி   நின்ற   எவ்வகைச்   சொற்களும்   மேற்
கூறப்பெற்ற வினையெச்சச் சொற்களின் இயல்பினவாகும்.
 

செய்து  செய்யூ   முதலியவை முதனிலை வகையான் வாய்பாடாயினாற்
போல  இவை  இறுதிநிலையான்  வாய்பாடொப்ப  நிற்கும்  வினையெச்சம்
என்பார் அவற்றியல்பினவே என்றார்.
 

பின்முன்  முதலியவையே   சொல்லாயின்   அவை   பெயராவதல்லது
வினையெச்சமாகாமையான் அவை இறுதிநிலைகளே என்பதும் முதனிலைகள்
வேறுள  என்பதும்   பெறப்படும். அம்முதனிலைகள்  பெயர் வடிவாகவோ
வினைமுற்று  வடிவாகவோ   வினையெச்ச  வடிவாகவோ நிற்றற்கு ஒவ்வா
ஆதலின்     அவை    பெயரெச்சவடிவாகிய    சொல்லாக    அமைதல்
வேண்டுமென்பது  உய்த்துணரப்படும்.   அங்ஙனம்  அமையும் முதனிலைச்
சொல்லும்  இவ்இறுதிநிலைச் சொல்லும் தம்முள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு
ஒருசொல்  நீர்மைத்தாய்   நின்றபின்   அவை    பெயரெச்சப்பொருளும்
பெயர்ப்பொருளும்  உணர்த்தாமல்  வினையை அவாவி  வினையெச்சமாய்
நிற்றலின் இவற்றை வேறு கூறினார் என்க.