வினையியல்255

அவை :  கற்றபின்,  தின்னாமுன்,  நாடுங்கால், வந்தக்கடை, ஆடுவழி,
காழ்த்தவிடத்து என ஒரு  சொல் நீர்மைத்தாய்   நிற்குங்கால்   அவற்றின்
முதனிலைகள்   காலமுணர்த்தாமல்  இறுதி  நிலைகளே காலமுணர்த்தலின்
"அன்ன  மரபிற்  காலங்   கண்ணிய   என்ன  கிளவியும்" என விளங்கக்
கூறினார்.
 

எ-டு :பின் : நீயிர்  பொய் கூறியபின்  மெய்கூறுவார்  யார்? - நீயிர்
பொய்கூறாநின்றபின்  மெய்  கூறுவார் யார்? கற்றபின்  நிற்க  அதற்குத்தக
எனப் 'பின்' ஈற்று வினையெச்சம் மூன்று காலமும் உணர்த்திவரும்.
 

முன் : மருந்துதின்னாமுன்  நோய் தீர்ந்தது-மருந்துதின்னா முன் நோய்
தீரும். நீயிர்  எம்மூர்க்கு   வருமுன்   எதிர்   கொள்வேன்   என 'முன்'
ஈற்றுவினையெச்சம் மூன்றுகாலமும் உணர்த்திவரும்.
 

கால் : வணங்கி நாம்  விடுத்தக்கால், அகன்றவர் திறத்தினி  நாடுங்கால்
எனக் 'கால்' ஈற்று வினையெச்சம் இறப்பும் எதிர்வும் உணர்த்தி வரும்.
 

கடை :  தொடர்கூரத்  துவ்வாமை  வந்தக்கடை  -  எனக் கடையீற்று
வினையெச்சம் இறந்தகாலம் உணர்த்தி வரும்.
 

வழி :  "விடுவழி   விடுவழிச்  சென்றாங்கவர் தொடுவழித்தொடு  வழி
நீங்கின்றாற்  பசப்பே"  எனவும் "உரைக்கும்  வழிக்  காண்மின்"  எனவும்
"அவள் ஆடுவழி  ஆடுவழி அகலேன்  மன்னே," எனவும் 'வழி' என்னும்
ஈறு மூன்று காலமும் உணர்த்தி வரும்.
 

இடத்து :   "களையுநர்   கைகொல்லும்   காழ்த்தவிடத்து"    எனவும்
"உற்றவிடத்   துதவுவார்     நல்லோர்"      எனவும்,    "வருமிடத்துக்
காண்மின்"  எனவும்   "இடத்து"  என்னும் ஈறு மூன்றுகாலமும் உணர்த்தி
வரும்.
 

அன்ன   மரபின்   காலங்கண்ணிய  கிளவியாய்வருவன : வான், பான்,
ஆல், மல், மை  முதலியவாம்.   எ-டு :   "கொள்வான்    கொடித்தானை
கொண்டெழுந்தான்"   "அலைப்பான்  பிறிதுயிரை   ஆக்கலும்   குற்றம்"
"அற்றால் அளவறிந்துண்க" எனவும் "கூறாமற்  குறித்ததன்  மேற்செல்லும்
கடுங்கூளி" எனவும் "கூறாமை   நோக்கிக்  குறிப்பறிவான்" எனவும் வரும்.
மையீறு மே எனத்திரிந்தும் வரும்.
 

"புணர்தரு   செல்வம் தருபாக்குச்  சென்றார்" எனவருமிடத்துப் பாக்கு
என்பதை வினையெச்ச ஈறாகக்  கொள்வர்  ஒருசாரார். அதனைச் செயற்கு
என்பதன் திரிபாகக் கோடலே நேரிதென்க.