எ-டு :செய்தென : மழை பெய்தெனப் புகழ்பெற்றது, மழை பெய்தென மரங்குழைந்தது எனவும், செய்யியர் : மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யியர் பலி கொடுத்தனர் எனவும், செய்யிய : மழை பெய்யிய முழங்கும், மழை பெய்யிய வான் பழிச்சுதும் எனவும், செயின் : மழை பெய்யின் புகழெய்தும், மழை பெய்யின் குளம் நிறையும் எனவும், செய : மழை பெய்யப் புகழ் பெற்றது, மழை பெய்ய மரங்குழைந்தது எனவும், செயற்கு : மழை பெய்தற்கு முழங்கும், மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும், பின் : தலைவனைப் பிரிந்தபின் தலைவி வருந்தினாள், தலைவன் இனிதுண்டபின் தலைவி உவந்தாள் எனவும், முன் : கடுத்தின்னாமுன் நா துவர்ந்தது, கடுத்தின்னா முன் நோய் தீர்ந்தது எனவும், கால் : உரைத்தக்கால் உரைபல்கும், வணங்கி விடுத்தக்கால் இன்னே வருவர் எனவும், கடை : நல்வினைதான் உற்றக்கடை உதவும், நல்வினைதான் உற்றக்கடை தீவினை சேரா எனவும், வழி : நல்வினை உற்றவழி உதவும், நல்வினை உற்றவழித் தீவினை வாரா எனவும், இடத்து : நல்வினை உற்றவிடத்துதவும், நல்வினை உற்றவிடத்துத் தீவினையாயும் எனவும் வரும். இவ்வாறு தாமியல் மருங்கின் வருவன நோக்கிக் கொள்க. |