260வினையியல்

இச்சூத்திரத்தொடு     சார்த்தி     மொழிந்த    பொருளொடு     ஒன்ற
மொழியாததனையும்    முட்டின்று     முடித்தல்   என்னும்   உத்தியான்
பெயரெச்சங்களும்  அடுக்கி     வரும்    என்றும்,   வரினும்   முன்னது
பின்னதனொடு   முடியாமல்  இறுதிநிற்கும்   பெயரொடு   முடியுமென்றும்
அடுக்கிவருங்கால் ஒத்தவாய்பாடே அடுக்கி வரும் என்றும் கொள்க.
 

எ-டு : இது பறக்கும் இருக்கும் பேசும்  கிள்ளை எனவும்  இது பறந்த
பேசிய கிள்ளை எனவும் வரும். பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
 

சூ. 235 :

நிலனும் பொருளும் காலமும் கருவியும்

வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட

அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய

செய்யும் செய்த என்னும் சொல்லே

(37)
 

க-து :

ஆயெண்கிளவி  என  நிறுத்த பொதுவினைகளும்  இறுதி நின்ற
இரண்டும் காலவேறுபாடுடையவை எனினும்  கொண்டு  முடியும்
பொருளான் ஒத்து நிற்றலின் அவை  இரண்டும் கொண்டுமுடியும்
பொருளாமாறு கூறுகின்றது.
 

உரை : செய்யும் செய்த என்னும் வாய்பாட்டு  விரவு வினைச்சொற்கள்,
நிலமும், செயப்படுபொருளும் காலமும்  கருவியும் வினைமுதற்கிளவியாகிய
பொருட்சொல்லும்    வினைப்   பெயரும்   உட்பட   அவ்  அறுவகைப்
பொருளையும் ஏற்று முடிதற்கு ஒத்த உரிமை உடையனவாகும்.
 

மேல்  வினைஎச்சத்திற்குப்    பொருள்   முடிபு கூறி இச்சூத்திரத்தான்
பெயரெச்சத்திற்குப்   பொருள்முடிபு     கூறுதல்    தோன்ற   "அவ்வறு
பொருட்கும்"  என்றார். தொழில் முதனிலை  எட்டனுள்  "இன்னதற்கு-இது
பயனாக"  என்னும்   பொருள்   பற்றிப்   பெயரெச்சம் தோன்றி வருதல்
சிறுபான்மையாகலின் ஏனை ஆறு பொருளையும் விதந்தோதினார்.
 

வினையெச்சம் பெயரெச்சம் வேறுபாடுகள்.
 

வினையெச்சம் : வினைஎச்சத்திற்கு  இருவகை   வினை  முற்றுக்களும்
தொழிற்பெயரும்   பெயரெச்சச்    சொல்லின்   முதனிலையும்   முடிபாக
வரும். தனது வினைமுதல் வினையொடும் பிற வினை முதல் வினையொடும்
முடியும். விரிப்பின்    வினைமுற்றாக    விரியும்.   பல்வகைப்  பெயரும்
எழுவாயாக   (முடிக்கப்படும்  சொல்லாக)  வரும். எழுவாயின்செயல் என்?
என்னும் வினாவிற்குச் செப்பாகவரும்.