எ-டு :சாத்தன் உண்டுவந்தான். சாத்தன் கற்றுவருதல் இலக்கணநூல். சாத்தன் படித்துமுடித்த நூல் - சாத்தன் காண வந்தான் - சாத்தன் காணக்காட்டினேன் - என்றாற்போல வரும். |
பெயரெச்சம் : பெயரெச்சத்திற்கு அறுவகைப் பெயர்களே முடிக்குஞ் சொல்லாக வரும். முடிக்குஞ் சொல்லாகிய பெயர்ப் பயனிலைக்களுக்குரிய எழுவாய் சுட்டுப் பெயராக நிற்கும். பெயரெச்சத்தை விரிப்பின் வினையாலணையும் பெயராய் விரியும். முடிக்குஞ் சொல்லாகிய பெயர்ப் பயனிலைக்கு இஃது அடையாக நிற்கும். தொழிலுக்குரிய கருத்தா அவாய்நிலையான் வந்து, அதுவும் அடையின் பயத்ததாய் நிற்கும். அவ் எச்சத்தை வினைமுற்றாகமாற்றினால் அவாய் நிலையான் வந்தகருத்தாவே எழுவாயாக மாறி நிற்கும். வினைமுதற்கிளவியைக் கொண்டு முடியும் பெயரெச்சத்தொடர்க்கு அவ்வினை முதற்கிளவியே கருத்தாவாக வரும். யாது, யார் என்னும் முடிக்குஞ் சொல்லின் நிலைமை, என்? என்னும் வினாவிற்குச் செப்பாக வரும். பிறவேறுபாடுகளையும் இங்ஙனம் ஓர்ந்து கொள்க. |
எ-டு :வாழும் இல்லம் - வாழ்ந்த இல்லம், இவை விரியுங்கால், இது சாத்தன் வாழ்வதாகும் இல்லம் - வாழ்ந்ததாகிய இல்லம் என விரியும். இது என்பதுஎழுவாய், இல்லம் என்பது பெயர்ப்பயனிலை, சாத்தன் அத்தொழிற்குரிய கருத்தா. இவற்றை வினை முற்றுத்தொடராக மாற்றின் சாத்தன் இவ் இல்லத்துள் வாழ்வான் - வாழ்ந்தான் எனவரும். வாழ்தலாகிய நிகழ்ச்சி இடம்பற்றியதாகலின் - வாழும் வாழ்ந்த என்னும் எச்சங்கள் இடப்பொருளொடு முடிந்ததாம். வாழும் என்னும் எச்சம் இல்லத்திற்கு விளக்கந்தரும் அடையாக நிற்றலையும், அத்தொழிலுக்குரிய கருத்தா அவாய் நிலையான் வந்து அதுவும் அடையாக நிற்றலையும் கண்டு கொள்க. |
வாழும் - வாழ்ந்த என்பவை வாழ்வது, வாழ்ந்தது என்னும் வினையாலணையும் பெயராக விரிந்துநிற்குமாறும் அறிக. வினையாலணையும் பெயர் காலங்காட்டும் என்பது வேற்றுமையியலுள் கூறப்பட்டது. பின்வருவனவற்றையும் இவ்வாறே விரித்தறிந்து கொள்க. |
செயப்படுபொருள் : கற்கும் நூல் - கற்றநூல் என்பவை விரியுங்கால் இது சாத்தன் கற்பதாகும். நூல்-கற்றதாகிய நூல் எனவாம். இவற்றின் வினை முற்றுத்தொடர் : சாத்தன் இந்நூலைக் கற்பான் கற்றான் என்பவையாம். |