காலம் : துயிலும்காலம் -- துயின்றகாலம் என்பவை விரியுங்கால் இது சாத்தன் துயில்வதாகுங்காலம், துயின்றதாகிய காலம் எனவாம். சாத்தன் இக்காலத்துத் துயில்வான்--துயின்றான் என்பவை முற்றுத்தொடர். |
கருவி : வெல்லும் வேல் -- வென்றவேல். இது சாத்தன் வெல்வதாகும்வேல்--வென்றதாகிய வேல் எனவிரியும்--சாத்தன் இவ்வேலான் வெல்வான், வென்றான் என்பவை வினை முற்றுத்தொடர் (வேல்--படைக்கருவி) |
வினைமுதற்கிளவி : நிலம் முதலாகிய ஐந்தும் அல்லாத பொருளாம். செய்வது, எழுவாய், வினைமுதல் என்பவை ஒத்த பொருளனவாம். வினைமுதலாகிய பொருள் குறித்து வரும் சொல் என்றவாறு - அஃது, ஓதும் பார்ப்பான், ஓதிய பார்ப்பான் எனவும், பாடும் குயில், பாடிய குயில் எனவும் ஐம்பாலும் பற்றி வரும். ஓதும் பார்ப்பான் என்பது இவன் ஓதுபவனாகும் பார்ப்பான் எனவும் ஓதிய பார்ப்பான் என்பது இவன் ஓதியவனாகிய பார்ப்பான் எனவும் விரியும். இப்பார்ப்பான் ஓதுவான் ஓதினான் என்பவை வினை முற்றுத்தொடர். |
வினை : வினை என்றது தொழிற்பெயரை : அது காணும் காட்சி, கண்டகாட்சி எனவரும். இவை, சாத்தன் காண்பதாகும் காட்சி, கண்டதாகிய காட்சி எனவிரியும். சாத்தன் இக்காட்சியைக் காண்பான் -- கண்டான் என்பவை வினை முற்றுத்தொடர். |
இது செயப்படுபொருளுள் அடங்குமாயினும் தொழிற் பெயராக வருதலின் பிரித்தோதினார். தொழிலே தொழிற்குச் செயப்படுபொருளாதல் சிறப்பு நோக்கி என்க. எனவே வினைமுதற் பொருட்பெயரும், இடப்பெயரும், காலப்பெயரும், கருவிப் பெயரும், தொழிற் பெயரும் அல்லாத ஏனைய பொருட்பெயரும் பண்புபெயரும் சினைப் பெயரும் ஈண்டுச் செயப்படுபொருட்குரியவாக வரும் என்பதுபெறப்படும். |
இனி, இப்பெயரெச்சங்கள் செய்யுள் வழக்கின்கண் சிறுபான்மை வேறுபட்டும், குறிப்பெச்சமும் இசையெச்சமுமாகிய சொற்கள் தொக்கும் வரும். அவற்றை இடத்திற்கும் பொருளுக்கும் ஏற்ப விரித்துணர்தல் வேண்டும். அவற்றுள் சிலவருமாறு :- |
நோய் தீரும்மருந்து. இது நோயைத் தீர்த்தற்கு ஆகும் மருந்து எனவிரியின் கருவியாம். நோயைத் தீர்க்கும்மருந்து என்பதன் விகாரமாயின் இம்மருந்து நோயைத் தீர்க்கும் என்னும் |