வினையியல்267

சூ. 240 :

செய்தென் னெச்சத்து இறந்த காலம்

எய்திட னுடைத்தே வாராக் காலம்

(42)
 

க-து :

'செய்து, முதலாய  வினை எச்சங்களுள் சில "தம்மரபினவாய்க்"
காலம் மயங்கி வருமாறு கூறுகின்றது.
 

உரை:செய்து என்னும் எச்சத்தினது  இறந்தகாலம் எதிர் காலத்தொடு
பொருந்தி வரும் இடனும் உடைத்தாகும்.
 

எ-டு :சாத்தன் (நாளை) உண்டு வருவான் என்றவழிச் செய்து என்னும்
எச்சம் வருவான் என்னும் எதிர்காலத்துச் சொல்லொடு பொருந்தி வந்தவாறு
காண்க.
 

உண்ணுதல்  தொழில்   வருதற்கு   முன் நிகழுமேனும் நாளை உண்டு
வருவான் என்புழி   உண்ணுதல்   தொழில் நிகழாமையும்   உண்ணுதலும்
வருதலும்    எதிர்காலத்தவாய்   நிற்கின்றமையும்   நோக்கி   'எய்திடன்
உடைத்தே வாராக்காலம்' என்றார்.
 

இச்சூத்திரத்தான்  'செய்து' என்பது  இறந்தகாலத்திற்குரியது  என்பதை
உணரவைத்து அது  மயங்கும்   என்பதும்   கூறப்பட்டது.  கொடி ஆடித்
தோன்றும் எனச் சிறுபான்மை நிகழ்காலஞ் சுட்டி வருமிடமும்
உடைத்தெனக் கொள்க.
 

'ஒன்றென  முடித்தல்   தன்னினமுடித்தல்' என்பதனான் செய்யூ-செய்பு
என்பவற்றிற்கும்   இறந்த   காலம்    பற்றி   வரும் ஏனைய வாய்பாட்டு
எச்சங்கட்கும் இம்மயக்க விதி கொள்க.
 

சூ. 241 :

முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை

எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்

(43)
 

க-து :

செய்யுமென்னும்   முற்றுச்சொல்   காலம்  மயங்கி    வருமாறு
கூறுகின்றது.
 

உரை:மூவகையாகிய   காலத்தினும்  மாறுபாடின்றி நிகழத் தோன்றும்
இயல்புடைய  எவ்வகைப்  பொருளையும்,   நிகழ்   காலத்தினது பொருள்
நிலைமை  உடைய  பொதுச் சொல்லாகிய "செய்யும்" என்னும்  சொல்லாற்
கிளந்து கூறுக.
 

முந்நிலைக்   காலத்தும்   தோன்றும்  இயற்கைப்  பொருளாவன நாள்
கோள்களின்  இயக்கமும்  பொருட்   பண்புகளுமாம். எ-டு   :   ஞாயிறு
இயங்கும், தீச்சுடும், மலைநிற்கும், யாறுஒழுகும் எனவரும்.