268வினையியல்

ஒருசார் பாலிடங்களுக்குப்  பொதுவாய்  வருதலின்  செய்யும்  என்னும்
சொல்லைப்   பொதுச்சொல்  என்றார். செய்யும்  என்னும் எச்சம் நிகழ்வும்
எதிர்வுமேயன்றி  இறந்த காலத்திற்கு  ஏலாமையின் ஈண்டுக்கூறப்  பெற்றது
முற்றுச்சொல்  என்பதை  உணர்த்த  மெய்ந்நிலைப் பொதுச்சொல் என்றார்.
இச்சூத்திரத்தான் நிகழ் காலத்திற்குரிய செய்யுமென்னும் முற்றுச்சொல் ஏனை
இரண்டு காலத்தொடும் மயங்குமாறு கூறப்பெற்றது.
 

சூ. 242 :

வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்

ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள என்மனார் புலவர்

[44]
 

க-து :

காலமயக்கம்  அதிகாரப்பட்டமையின்  ஏனை முற்றுச்சொற்களும்
காலம் மயங்கி வருமாறு கூறுகின்றது.
 

உரை : எதிர்காலத்தும்   நிகழ்காலத்தும்    வரும்     வினைச்சொற்
பொருண்மைகளை ஒருபடித்தாக   இறந்தகாலக்குறிப்பொடுகூறுதல்  விரைவு
பொருளைக் கருதியவாறாம் என்று கூறுவர் புலவர்.
 

வினைச்சொற்கிளவி  என்றது  வினை  நிகழ்பொருளை. ஓராங்கு இறந்த
காலத்துக் குறிப்பொடு கிளத்தல் எனக் கூட்டிப் பொருள் கொள்க.
 

வரலாறு : சோறுண்ணச் செல்வான்  ஒருவனை அழைத்துச் செல்லவந்த
ஒருவன் இன்னும்   உண்டிலையோ? என்ற   வழி,  அவன்   உண்டேன்,
வந்தேன்,  என்று கூறும். உண்ணா நிற்பவனும் அவ்வாறே கூறும். அவ்வழி
எதிர்காலத்திற்குரிய    வினை    இறந்தகாலத்தாற்  கூறப்பட்டமைகாண்க.
'மலர்மிசை ஏகினான்' [குறள் - 3] என்பதுமது.
 

இங்ஙனம்  செப்புவோன்  இறந்தகாலச் சொல்லாற் கூறினும் கேட்போன்
அத்தொழில்   விரைந்துநிகழும்    என்பதை   உணர்தலின் "குறிப்பொடு
கிளத்தல்"  என்றார். வாராக்காலம்   நிகழ்காலம் ஆகிய   இரண்டினையும்
கிளத்தலின்   'விரைந்த      பொருள'     என்றார்.   இச்சூத்திரத்தான்
இறந்தகாலச்சொல் ஏனைய இரண்டினொடும் மயங்குமாறு கூறப்பட்டது.
 

சூ. 243 :

மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி

அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி

செய்வ தில்வழி நிகழுங் காலத்து

மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே

(45)