எ-டு : இவ்ஆடை கொள்க. என்றவழி மற்றையது கொள்வேன் எனின் அச்சுட்டுப் பிறிதொரு ஆடையையே சுட்டி நிற்குமாறு காண்க. இவ்வீரன் தக்கானோ என்றவழி மற்றையவன் தக்கான் எனின் அச்சுட்டுப்பிறனொரு வீரனையே சுட்டுதலும் பரிமறவர் பொருவரோ என்புழி மற்றையவர் பொருவர் எனின், கரிமறவர், தேர்மறவர் ஆகியோரையே சுட்டுதலும் கண்டு கொள்க. சிறுபான்மை மற்றை ஆடை கொள்வேன், மற்றைவீரன் தக்கான், மற்றை மறவர் பொருவர் எனப் பொருட் பெயரொடும் வரும். எவ்வாறு வரினும் இனக்குறிப்பைத் தருவது "மற்றை" என்னும் இடைச் சொல்லேயாதல் அறிக. |
என என்பது செயவெனச்சப் போலியாய் நிற்குமாறு போல மற்றை என்பது பெயரெச்சப் போலியாய் நிற்குமோர் இடைச் சொல்லாதலின் இது மற்று என்பதன் விகாரமன்று என்க. மற்று என்னும் இடைச்சொல் வினையொடு முடியும் இயல்பினதாதலையும் அறிக. |
சூ. 266 : | மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் |
(17) |
க-து: | மன்ற என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை: 'மன்ற' என்னும் இடைச்சொல் தெளிவு பொருண்மை குறித்து வரும். |
எ-டு : "கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே" (நற்-34) எனவரும். தேற்றம் என்பது ஈண்டு உறுதி செய்தலைக் கருதிற்று. |
சூ. 267 : | தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே |
(18) |
க-து: | தஞ்சம் என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:தஞ்சம் என்னும் இடைச்சொல் எளிமைப் பண்புணர்த்தாமல், எளிதாதற் குறிப்புப் பொருள் பற்றி வரும். |
எ-டு : "ஈயென இரக்குவாராயின் சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்" (புறம் - 73) அரசைப் பெறுவது எளிது என்பது பொருள். அடைக்கலம் என்னும் பொருள் தரும் 'தஞ்சம்' என்னும் பெயர்ச்சொல் வேறு; இவ்இடைச்சொல் வேறு. |
தஞ்சு என்பது இதன் முதனிலை, தஞ்சாவூர் (தஞ்சு ஆவூர்- தஞ்சாவூர்) என்பது இதனடியாகப் பிறந்த பெயராம். வளங்காரணமாக எண்மையான ஊர் என்பது கருத்து. |