| சூ. 275 : | மியாஇக மோமதி இகும்சின் என்னும் |
| ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல் |
(26) |
க-து: | முன்னிலைக்கண் அசைநிலையாம் இடைச்சொற்கள் இவைஎன்கின்றது. |
| |
உரை:மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் ஆறும் முன்னிலையாகிய அவ்விடத்து அசைச் சொல்லாய் வரும். சின்என்றதுஇசின் என்பதன் முதற்குறையாகும். "இகுமிசின்" எனப் பாடங்கோடலுமாம். |
எ-டு : கேண்மியா கொற்றா. கண்பனி ஆன்றிக என்றி தோழி-காமஞ் செப்பாதுகண்டது மொழிமோ-உரைமதி வாழியோ வலவ. மெல்லம்புலம்ப கண்டிகும். காப்பும் பூண்டிசின் கடையும் போகலை எனவரும். |
| சூ. 276 : | அவற்றுள் |
| இகுமும் சின்னும் ஏனை யிடத்தொடும் |
| தகும்நிலை உடைய என்மனார் புலவர் |
(27) |
க-து: | மேலனவற்றுள் இரண்டற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதிகூறுகின்றது. |
| |
உரை : மேற்கூறிய ஆறனுள் இகும் இசின் என்னும் இடைச் சொற்கள் முன்னிலையேயன்றித் தன்மையும் படர்க்கையுமாகிய இடங்களொடும் வரத்தகும் இயல்பினை உடைய என்று கூறுவர் புலவர். |
எ-டு : கண்டிகும் அல்லமோ எனவும், கண்ணும் படுமோ என்றிசின்யானே எனவும், தன்மைக்கண் வந்தன. புகழ்ந்திகுமல்லமோ பெரிதே எனவும், யாரஃதறிந்திசினோரே எனவும் படர்க்கைக்கண் வந்தன. |
சூ. 277 : | அம்ம கேட்பிக்கும் |
[28] |
க-து: | அம்ம என்னும் இடைச்சொல்லின் பொருட்குறிப்புக் கூறுகின்றது. |
| |
உரை:அம்ம என்னும் இடைச்சொல் கேட்பாய் என்னும் பொருட்குறிப்பொடு நிற்கும். 'கேட்பிக்கும்' எனக் கருவி கருத்தாவாக ஓதப்பட்டது. எ-டு : அம்ம வாழி தோழி ! எனவரும். |
சூ. 278 : | ஆங்க உரையசை |
(29) |
க-து: | ஆங்க என்னும் இடைச் சொல்லின் தன்மை கூறுகின்றது. |
| |
உரை: ஆங்க எனும் இடைச்சொல் உரையசையாக வரும். |