292இடையியல்

என்றது;  ஒருவன்  ஒரு கருத்தைக் கூறுங்கால் பிறனொருவன் அதனை
உடன்படுதற்    கண்ணும்,    வற்புறுத்துதற்    கண்ணும்    கூறுமிடத்து,
வியங்கோட்பொருள்  பட   வரும்  'ஆக' 'ஆகல்', என்னும் சொற்களும்,
வினைமுற்றுப் பொருள்பட வரும், 'என்பது' என்னும்  சொல்லும்  தனித்து
வாராமல் அடுக்கி வருங்கால்  அவற்றுள்  ஒன்று  பயனிலையாய்  நின்று
பொருள்தர ஒன்று அசைநிலையாய் நிற்கும் என்றவாறு.
 

அம்  மூன்று   சொற்களும்   வினைமுற்றாய்   நிற்றலின்   ஆவயின்
என்றும்,  இரட்டித்தவழி  ஒன்று  இடைச்சொல்லாய்  அசைத்து  நிற்றலின்
அம்மூன்றும்  என்றும்   விளங்கக்  கூறினார்.  அகரச்சுட்டு  விகாரத்தான்
தொக்கது.
 

வரலாறு:- ஒருவன் மழை வேண்டி மக்கள் வான் பலிதரல் வேண்டும்
என்று கூறியவழி அதனை உடன்படுவான் ஒருவன்  ஆக ஆக ! என்றோ,
ஆகல் ஆகல் ! என்றோ கூறும். அவ்வழி அவற்றுள் ஒருசொல் அங்ஙனம்
ஆவதாக  என்னும்  பொருள்தர  ஏனையது  அசைநிலையாக  நின்றவாறு
காண்க.  ஒருவன்  நல்லாறு  எனினும்  கொளல்தீது  என்றவழி  அதனை
வலியுறுத்தும்  ஒருவன்  'என்பது  என்பது' என்னும். ஆண்டு ஒரு சொல்,
என்று  சொல்லுதல்   தகவினது    என்னும்     பொருள்தர   ஏனையது
அசைநிலையாய்    நிற்றலைக்     காண்க.     பொருள்நிலைச்சொல்லும்
அசைச்சொல்லும் வடிவான் ஒற்றுமைப்பட்டு நிற்றலின் பிரிவில் அசைநிலை
என்றார்.
 

இவற்றை  அடுக்கெனக்  கொள்ளலாம் எனின் அடுக்கி வரும் சொற்கள்
பொருளுணர்த்துவதல்லது அசைநிலையாக வாரா  என்க.  இச்சூத்திரத்திற்கு
உரையாசிரியன்மார் கூறும் உரையும் விளக்கமும்  அவரவர் கருத்துக்கட்கே
முரண்படுதலின் ஒவ்வாமையறியலாம்.
 

சூ. 282 :

ஈரள பிசைக்கும் இறுதியி லுயிரே

ஆயியல் நிலையும் காலத் தானும்

அளபெடை நிலையும் காலத் தானும்

அளபெடை யின்றித் தான்வருங் காலையும்

உளவென மொழிப பொருள்வேறு படுதல்

குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்

(33)
 

க-து:

'ஒள'  என்னும்   ஓரெழுத்தொருமொழி    இடைச்சொல்லாய்ப்
பொருட் குறிப்புணர்த்தி வருமாறு கூறுகின்றது.