வரலாறு :தவறு செய்த ஒருவன் தான் செய்ததனை மறுத்துக்கூறும் வழி அதனை உள்ளத்தான் வெறுப்பான் ஒருவன் நீ செய்ததுநன்றே நன்றே என்ற வழித் 'தீது' என்னும் குறிப்புத் தோன்றுமாறு காண்க. நலஞ் செய்து துன்புறுவானை நோக்கி ஒருவன் இஃது ஊழன்றே வருந்தற்க, என்புழி ஊழ் நுகர்வியாது செல்லாது என்னும் குறிப்புணர்த்துமாறு காண்க. அந்தோ எந்தை அடையாப் போரில் (புறம்-261) என்பதும் அன்னோ என்னாவதுகொல் தானே (புறம்-345) என்பதும் இரங்கற் குறிப்புணர்த்தி நிற்குமாறு காண்க. |
அன்னபிறவும் என்றதனான் என்னே ! எனவும் அச்சோ ! எனவும் ஐயோ ! எனவும் வருவன இரக்கம், அவலம் முதலிய குறிப்புணர்த்தி நிற்குமாறும், ஒக்கும் ஒக்கும் என்பது ஐயக்குறிப்புணர்த்தி நிற்குமாறும் கண்டு கொள்க. |
இன்னும் அதனானே அஆ இழந்தான் என்று எண்ணப்படும் எனவும் அம்மம்மா இனிப்பொறேன் எனவும் சிறுபான்மை ஆகார ஈற்றினவாய்க் குறிப்புணர்த்தி வருவன பிறவும் சான்றோர் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. |
சூ. 284 : | எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் |
| தத்தமுள் மயங்கும் உடநிலை இலவே |
(35) |
க-து: | எஞ்சுபொருட் கிளவியான் முடியும் உம்மை இடைச்சொல்பற்றியதோ ரியல்பு கூறுகின்றது. |
|
உரை:ஒரு தொடரின்கண் எச்சவும்மையும், எதிர்மறையும்மையும் தத்தமக்குள் ஒருங்கு மயங்குதல் இல. என்றது; பாணன் பாடுதற்கும் உரியன் என்புழி எச்சப் பொருள் கருதியவழி வாயிலாதற்கும் உரியன் எனவும், எதிர்மறைப் பொருள் கருதியவழிப் பாடாமைக்கும் உரியன் எனவும் வருமன்றே. ஆண்டு யாதேனும் ஒருபொருள் பற்றியல்லது இரண்டு பொருளும் ஒருங்குவாரா என்றவாறாம். |
சாத்தனும் வந்தான் என்னும் தொடர் எதிர்மறைப் பொருள் தருதற்கும், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்னும் தொடர் பிற எச்சப் பொருள்தருதற்கும் ஏலாமையின் இன்னோரன்ன தொடர்களை நீக்கிச், சாத்தன் உண்ணுதற்கும் உரியன் என்றாற் போல இரு பொருளும் மயங்குதற்கு ஏற்ற தொடர்க்கண்ணது இவ் ஆராய்ச்சி என்பது தோன்ற "உடனிலைஇல" என்றார். எச்ச உம்மை எச்சஉம்மையொடும் எதிர்மறை உம்மை எதிர்மறை உம்மையொடும் மயங்குதற்கு உரியவாகலின் "தம்முள்" என்னாது "தத்தமுள்" என்றார். |