இடையியல்295

உரையாசிரியன்மார் இரு தொடர்களைக்  காட்டி   விளக்கங் கூறுதலும்
அமைதி கூறுதலும் ஆசிரியர் கருத்திற்கும் நூல் நெறிக்கும் ஏலா என்க.
 

சூ. 285 :

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் லாயின்

பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்

(36)
 

க-து :

எச்ச உம்மைக்காவதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள : எச்ச  உம்மையான்   தழுவப்படும்  எஞ்சுபொருட்  கிளவி
உம்மையின்றிச் செஞ்சொல்லாக   நிற்பின்   அதனை  உம்மையொடுநின்ற
தொடருக்குப் பிற்கூறாது முற்கூறுவாராக.
 

எ-டு : சாத்தன்    வந்தான்     கொற்றனும்     வந்தான்   எனவும்
அடகுபுலால்பாகு   பாளிதமும்   உண்ணான்   கடல் போலும் கல்வியவன்
எனவும் வரும்.
 

சூ. 286 :

முற்றிய உம்மைத் தொகைச்சொன் மருங்கின்

எச்சக் கிளவி உரித்து மாகும் 

(37)
 

க-து:

முற்றும்மைக்காவதொரு மரபு கூறுகின்றது.
 

உரை:முற்றும்மையடுத்துத் தொகை  குறித்து  நிற்கும் சொல்லின்கண்
எச்சக்கிளவி வருதற்கும்  உரியதாகும்-அஃதாவது  தொகைகுறித்து  நிற்கும்
முற்றும்மை எச்சப்  பொருள்பட  வருதலும்  ஆகும்  என்றவாறு.  உம்மை
எதிர்மறையாதலின் முற்றுப் பொருள் தருதலே  பெரும்பான்மை என்பதாம்.
தொகை என்றது எண்ணுத்தொகுதியை.
 

எ-டு : பத்துங் கொடாதே  என்றவழிச்  சில  எஞ்சக்கொடு   என்றும்
ஒரோவழிப்  பொருள்  தருதல்  காண்க.  'தொகை'  எனப்  பொதுப்படக்
கூறியவதனான்  எல்லாவற்றையும்   'கொடாதே',  அனைத்தும்  கொடால்
எனவருதலும் கொள்க.
 

எச்சப்   பொருள்    தருதல்      பெரும்பான்மையும்     எதிர்மறை
வினைக்கண்ணே வரும்.  பொன்  பத்தும்  கொடு  என்றவழி  அதற்குரிய
தனிசும் (வட்டியும்) கொடு எனச்சிறுபான்மை விதி வினைக்கண்ணும் வரும்.
 

சூ. 287 :

ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி 

கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே 

(38)
 

க-து:

ஈற்றசை ஏகாரத்திற்கொரு சிறப்பு இயல்பு கூறுகின்றது.