ஏடெழுதுவோரான் நேர்ந்த பிழையாதல் தெளியலாம். உரையாசிரியன்மார் கெழு என்பது 'கேழ்' என நீண்டுவருமென அமைதி கூறினர். நிறப்பொருளில் நீளாது வருமிடம் ஒன்றேனும் இன்மையின் அது பொருந்தாமையறிக. பொருந்துதல் என்னும் பொருட்டாய் வரும் கெழுவென்னும் உரிச்சொல்லே நீண்டுவரும் என்க. 'கெழு' என்பது வெளிப்படு சொல்லாகலின் அதனை விடுத்துக் 'கேழ்' என்பதனையே ஆசிரியர் விதந்தோதினார் என்க. குர்-குரு என்னும் குறைச்சொல் குரீஇ, குரா, என வேறு எழுத்துப் பெற்றன்றிப் பெயராக வாராது. எனவே, குரு என்பது பெயரடையாக வரும் உரிச்சொல்லாயிற்று. கேழ் என்பது பெயர்ப் போலியாய் வந்து உரிச்சொல்லாயிற்று. |
சூ. 303 : | செல்லல் இன்னல் இன்னா மையே |
(6) |
உரை:செல்லல் இன்னல் என்னும் குறிப்புரிச் சொற்கள் இன்னாமை என்னும் பொருள் பற்றி வரும். |
எ-டு :மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல் (அகம்-22) எனவும், வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்து (மலைபடு-374) எனவும் வரும். செல்-இன் என்னும் குறைச் சொற்கள் அல் என்னும் ஈற்றொடு கூடியே இப்பொருள் உணர்த்தும் என்றறிக. 'செல்' என்பது சென்றான் செலவு செல்க எனவும், இன் என்பது இனி, இன்பு, இனம் எனவும் வரும் வழி வேறு பொருளுணர்த்தலின் இவை இன்னாமைப் பொருள் தந்து தனித்துப் பெயர்ப்போலியாய் வருதற்கண் உரிச்சொல்லாகும் என்க. |
சூ. 304 : | மல்லல் வளனே |
(7) |
உரை:மல்லல் என்னும் குறிப்புரிச்சொல் வளம் என்னும் பொருள் பற்றிவரும். இதுவும் மேலன போல அல் என்னும் ஈறு பெற்றே வரும். |
எ-டு :மல்லல் மால்வரை (அகம் - 52) (மல்லல் - செழுமை) இதன் முதனிலையாகிய 'மல்' என்பது, மலை, மலி, மலர், மல்கு எனப் பெயர்வினைகட்கு முதனிலையாய் வருங்கால் பொருள் வேறுபடும் ஆதலின் இது பெயர்ப் போலியாய் வந்து உரிச்சொல்லாயிற்று. |
சூ. 305 : | ஏபெற் றாகும் |
(8) |
உரை:ஏ என்னும் குறிப்புரிச்சொல் 'பெற்று' என்னும் |