பொருட்டாய் வரும். (பெற்று - செல்வம் - பாக்கியம் என்னும் பொருளது) பெற்று என்பதனடியாகப் பிறந்ததே "பெற்றம்" (ஆன்) என்பதாகும். பெற்று என்பதற்குப் பெருக்கம் எனப் பொருள் கூறுவார் சேனாவரையார். அது பொருந்துமாறில்லை என்க. |
எ-டு : ஏகல் லடுக்கம் (நற்-116) எனவரும். இது பெயரடையாக வந்து உரிச்சொல்லாயிற்று. |
சூ. 306 : | உகப்பே உயர்தல், உவப்பே உவகை |
(9) |
குறிப்பு : இஃது இரண்டு சூத்திரமாக அமைதல் வேண்டும். |
உரை:உகப்பு என்னும் குறிப்புரிச்சொல் உயர்தலாகிய பொருளுணர்த்தி வரும். உவப்பென்னும் குறிப்புரிச்சொல் உவகை என்னும் பொருளுணர்த்தி வரும். |
எ-டு : 1) விசும்புகந் தாடாது இரைதேர்ந் துண்ணாது, என வரும். இஃது உக் என்னும் குறைச் சொல்லடியாகப் பிறந்த உகுதல், உகுத்தான், உகுத்து - உக என்பவற்றினின்று பொருள் வேறுபட்டு வினைப் போலியாய் நின்று உரிச் சொல்லாயிற்று. 2) உவந்துவந்து ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலனளைஇ (அகம்-35) எனவரும். இது வெளிப்படு சொல்லாயினும் உகரத்தின் பின்வரும் ககர வகரங்கள் வெவ்வேறு பொருளின என்பதும் அவை மயங்கல் கூடா என்பதும் அறிவித்தற்கு இவற்றை எடுத்தோதினார். இனி, இங்ஙனம் வரும் சுளிப்பு-சுழிப்பு துகைப்பு-துவைப்பு முதலாயவற்றையும் ஓர்ந்து கொள்க. |
சூ. 307 : | பயப்பே பயனாம் |
(10) |
உரை:பயப்பு என்னும் குறிப்புரிச்சொல் பயன் என்னும் பொருட்டாய் வரும். |
எ-டு : ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே (குறள்-354) எனவரும். இனி விளைவு என்னும் பொருள்தரும் 'பய' என்பதனடியாகப் பயத்தல், பயந்தாள், பயக்கும், பயவாக் களரனையர் எனவரும் உரியடி வேறு; இது வேறு. இது தனித்துப் பெயர்ப்போலியாக வரும். |
சூ. 308 : | பசப்பு நிறனாகும் |
(11) |
உரை:பசப்பு என்னும் பண்புரிச்சொல் நிறனாகிய பொருட்காகிவரும். |