சூ. 313 : | சீர்த்தீ மிகுபுகழ் |
(16) |
உரை:சீர்த்தி என்னும் குறிப்புரிச்சொல் 'மிக்கபுகழ்' என்னும் பொருளுணர்த்தி வரும். சீர் என்பது தொழிற்பெயராய காலை, சீர்த்தான் சீர்த்தது என வேறு பொருள் உணர்த்தி வருதலின் எடுத்தோதினார். எ-டு : வயக்கஞ்சால் சீர்த்தி - எனவரும். |
சூ. 314 : | மாலை இயல்பே |
(17) |
உரை:மாலை என்னும் குறிப்புரிச் சொல் இயற்கை (தன்மை) என்னும் பொருள்பற்றி வரும். |
எ-டு : இரவரன் மாலையன் (குறிஞ்சி - 239) எனவரும். மால் என்பதனடியாகப்பிறந்த நெடுமை, மயக்கம், பொழுது முதலியபொருளுணர்த்திவரும் சொல்வேறு இதுவேறு. |
சூ. 315 : | கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் |
(18) |
உரை:கூர்ப்பு கழிவு என்னும் குறிப்புரிச் சொற்கள் தம்மை அடுத்து நிற்கும் பொருளைச் சிறப்பித்துவரும். |
எ-டு : துனிகூரெவ்வம் (சிறுபா - 39) எனவும் "சினனே காமம் கழிகண் ணோட்டம்" எனவும் வரும். இவை வினைப் போலியாய்ப் பெயரடையாக வரும். இவ்வுரிச்சொற்கள் மிகுதிப் பொருள் தருவதாக மயங்கியுரைப்பார் பவணந்தியார். மிகுதி வேறு உள்ளது சிறத்தல் வேறு என அறிக. |
சூ. 316 : | கதழ்வும் துனைவும் விரைவின் பொருள |
(19) |
உரை:கதழ் - துணை என்னும் குறிப்புரிச் சொற்கள் விரைதலாகிய பொருள் உணர்த்தி வரும். எ-டு : "கதழ்பரி நெடுந்தேர்" (நற்-223) எனவும் "துனைபரிநிவக்கும் புள்ளின் மான" எனவும் வரும். |
சூ. 317 : | அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும் |
(20) |
உரை:அதிர்வு விதிர்ப்பு என்பவை நடுங்குதலாகிய குறிப்புப் பொருளைத் தரும். |
எ-டு : அதிரவருவதோர் நோய் (குறள்-429) எனவும் விதிர்ப்புற வறியா ஏமக் காப்பனை (புறம்-20) எனவும் வரும். |