உரியியல்317

இச்சூத்திர உரையுள் 'அதிழ்  வெனப்பாடமோதி   அதிழ்கண்   முரசு
என்று    உதாரணம்      காட்டுவாருமுளர்'     எனச்   சேனாவரையர்
குறித்துள்ளமையின்   இதன்    உண்மைப்பாடம்.    அதிழ்   வென்பதே
எனத்துணியலாம்.   என்னை?     அதிர்வென்பது     பெயர்வினைகட்கு
முதனிலையாகவரினும் தனித்துவரினும் பொருள்வேறு படாமையின்  அஃது
பாடாமாதற்கியையாமை யறியலாம். பொருள்  ஒற்றுமை  பற்றி  விதிர்ப்பும்
உடனோதப்பட்டதென்க.
 

சூ. 318 :

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள

(21)
 

உரை: வார்தல் - போகல்  -   ஒழுகல் (வார்-போகு-ஒழுகு) என்னும்
குறிப்புரிச்சொல் மூன்றும்   நேர்தலும்   நெடுமையுமாகிப்  பண்புணர்த்தும்
பொருளினவாகும். வார்தல்-வரிசையாதல், நேர்தல்-நிரலாதல்.
 

எ-டு : வார்ந்திலங்கும் வை எயிற்றுச்  சின்மொழி   அரிவை  (குறு-14)
எனவும்   தெள்ளறல்  தழீஇய   வார்மணலடைகரை  (அகம்-34)  எனவும்
"போகுகொடி மருங்குல்" எனவும் "திரிகாய் விடத்தரொடு காருடை போகி"
(பதிற்-13) எனவும் 'ஒழுகுகொடி மருங்குல்' எனவும்  'மால்வரை   ஒழுகிய
வாழை' (சிறுபாண்-21) எனவும் வரும். இவை  குறிப்புப் பொருளின் நீங்கிப்
பண்புணர்த்தி வருதலின் எடுத்தோதினார் என்க.
 

சூ. 319 :

தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்
(22)
 

உரை: தீர்தல்   தீர்த்தல்   என்னும்   இரண்டின்   முதனிலையாகிய
'தீர்' என்னும் குறிப்புரிச்சொல் விடுதல் என்னும்  பொருட்குரித்தாய் வரும்.
முதனிலை இரண்டற்கும் ஒன்றாதலின்   விடற்பொருட்டு  என ஒருமையாற்
கூறினார்.
 

எ-டு : கலையே   பிணைவயின்  தீர்தலும் அஞ்சி (புறம்-320) எனவும்
வல்லன் எந்தை பசிதீர்த்தல் என, (புறம் - 379) எனவும்  வரும்.  ஆர்தல்,
ஆர்த்தல்-வார்தல், வார்த்தல் என்றாற் போல  ஒற்று  மிகுதலான் பொருள்
வேறுபடுவனவும்   உளவாதலின்    இன்னோரன்னவை   ஒற்றுமிகுதலான்
தன்வினையும் பிறவினையுமாக வரும் வேறுபாடன்றிப்  பொருள் வேறுபடா
என்பதறிவித்தற்கு எடுத்துக்காட்டாகத் தீர்தலும்  தீர்த்தலும்  என இவற்றை
எடுத்தோதினார் என்க.