உரியியல்319

"தட"  முதலாய  மூன்றும்  பெயரடையாக  வந்து உரிச் சொல்லாயின.
நளிந்தனை   வருதல்  உடன்றனளாகி   (பதிற்-52)  என்பதன்கண்  வந்த
நளிந்தனை என்பது நளிய  என்னும்  உவம  உருபிடைச்  சொல்லடியாகப்
பிறந்த வினைச்சொல் என அறிக.
 

சூ. 325 :

பழுது பயமின்றே
(28)
 

உரை:பழுது    என்னும்      குறிப்புரிச்    சொல்   பயனின்மைப்
பொருட்டாய் வரும்.
 

எ-டு : பழுதுகழி  வாணாள்   எனவரும்.  இது   தனித்துப்   பெயர்ப்
போலியாய் வரும்  உரிச்சொல்,  ஈண்டு   வினைக்குறிப்புப்   பொருள்பட
நின்றது.
 

சூ. 326 :

சாயல் மென்மை
(29)
 

உரை:சாயல்   (சாய்)  என்னும்  பண்புரிச்சொல் மென்மைத் தன்மை
உணர்த்திவரும், சாயன் மார்பு நனியலைத் தன்றே (பதிற் - 16)  எனவரும்.
இதுவும் பெயர்ப்போலியாய்த் தனித்து வரும்.
 

சூ. 327 :

முழுதுஎன் கிளவி எஞ்சாப் பொருட்டே
(30)
 

உரை:'முழுது    என்னும்   குறிப்புரிச்   சொல்   எஞ்சாமையாகிய
பொருட்குரியதாய் வரும்.
 

எ-டு : மண்முழுது ஆண்டநின் முன்னோர்போல' என வரும். முழுமை
என்னும்   பண்புப்பெயர்   வேறு   இவ்உரிச்சொல்    வேறென்க.   இது
பெயர்ப்போலியாய்த் தனித்துவரும்.
 

சூ. 328 :

வம்பு நிலையின்மை
(31)
 

உரை:வம்பு என்னும் குறிப்புரிச் சொல் நிலையின்மையாகிய  பொருள்
குறித்து வரும். எ-டு : வம்ப மாரியைக் காரென மதித்தே  (குறு - 66) என
வினைப்போலியாய் வரும்.
 

சூ. 329 :

மாதர் காதல்
(32)
 

உரை:மாதர் என்னும் குறிப்புரிச் சொல் காதல் என்னும் பொருட்டாய்
வரும் (காதல் - கவர்ச்சி) எ-டு : மாதர்கொள்  மானோக்கின்  மடநல்லாய்
(கலி - 56) எனவரும். இது பெயர்ப்போலியாய்த் தனித்து வரும்.