320உரியியல்

சூ. 330 :

நம்பும் மேவும் நசையா கும்மே
(33)
 

உரை:நம்பு-மே என்னும்  குறிப்புரிச்   சொற்கள்   நசை   என்னும்
பொருட்குரியவாய் வரும் (நசை - விருப்பம்)
 

எ-டு : நயந்து  நாம்விட்ட     நன்மொழி     நம்பி   (அகம் - 198)
எனவும் பேரிசை நவிரம் மேஎய்   உறையும்   (மலைபடு - 72)   எனவும்
வரும். இவை   வினை   எச்சத்திற்கு   முதனிலையாகவன்றித்   தனித்து
வராமை   கருதி   எடுத்தோதினார் போலும்.   நம்பன், நம்பி  என்பவை
நம்பு என்பதனடியாகப் பிறந்தவையாகும்.
 

சூ. 331 :

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்

(34)
 

உரை:ஓய்தல்   (ஓய்)   ஆய்தல்   (ஆய்)  நிழத்தல் (நிழத்து) சாய்
என்னும் குறிப்புரிச்சொல்லிடத்தவாகிய  நான்கும்  தாம்  அடுத்து  நிற்கும்
சொற்பொருளின் நுணுக்கத்தை உணர்த்திவரும் (நுணுக்கம்-மெலிவுறுதல்)
 

எ-டு : வேனில்   உழந்த   வறிதுயங்கு  ஓய்களிறு (கலி - 7) எனவும்,
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்தானா  மைந்தினை  (கலி - 96)  எனவும்,
நிழத்தயானை மேய்புலம்படர  (மதுரை-303)  எனவும்,   கயலறல்  எதிரக்
கடும்புனல்   சாஅய்   (நெடுநல்-18)  எனவும்  வரும்.  [ஆய்ந்ததானை -
நுணுகியதுகில்].   இவை     பெரும்பான்மையும்     வினைப்போலியாய்ப்
பெயரடையாக வரும்.
 

சூ. 332 :

புலம்பே தனிமை
(35)
 

உரை:புலம்பு  என்னும்   குறிப்புரிச்சொல் தனிமை என்னும் பொருள்
உணர்த்தி வரும், எ-டு : புலிப்பற் கோத்த புலம்புமணித்  தாலி  (அகம்-7)
எனவரும். இது பெயர்ப்போலியாக வரும்.
 

சூ. 333 :

துவன்று நிறைவாகும்
(36)
 

உரை:துவன்று   என்னும்   குறிப்புரிச்சொல்     நிறைவு   என்னும் பொருட்காகி   வரும்.   எ-டு :   ஆரியர்   துவன்றிய   பேரிசையிமயம்
(பதிற்-11) எனவரும். இஃது வினைப்போலியாக வரும்.
 

சூ. 334 :

முரஞ்சல் முதிர்வே
(37)
 

உரை:முரஞ்சு   என்னும்   குறிப்புரிச்சொல்   முதிர்தல்   என்னும்
பொருள் குறித்து வரும். எ-டு : கோடுபல  முரஞ்சிய   கோளி   ஆலத்து
(மலைபடு-268) என வினைப்போலியாக வரும்.