பொருளில் எய்வு, எய்தல் என்றாற் போல உடன்பாட்டின்கண் வாராமையான் 'எய்யாமை' என்னும் சொல்லை மட்டும் விதந்தோதினார் ஆசிரியர். |
எ-டு : நன்றும் எய்யாமையின் ஏதில பற்றி (ஐங்-119) எய்யாமையொடு இளிவுதலைத் தருமென (நற்-284) எனவரும். இது வினைப்போலியாய் வரும். வெளிப்படவாரா உரிச்சொல் என்பதன் பொருளைப்பிறழ உணர்ந்தமையான் இச்சூத்திரத்திற்குத் தமக்குத் தோன்றியவாறெல்லாம் உரையாசிரியன்மார் உரையும் விளக்கமும் கூறிச்சென்றனர். |
சூ. 344 : | நன்று பெரிதாகும் |
(47) |
உரை:நன்று என்னும் குறிப்புரிச் சொல் பெரிது என்னும் பொருட்டாய்வரும். எ-டு : நன்றும் அரிதுதுற்றனையாற் பெரும (அக-10) எனவரும். இது நன்மை என்னும் பண்புப்பொருள் உணர்த்தாமையின் உரிச்சொல்லாயிற்று. இது வினைப்போலியாய் வரும். |
சூ. 345 : | தாவே வலியும் வருத்தமு மாகும் |
(48) |
உரை:தா என்னும் குறிப்புரிச் சொல் வலிதாதலும் வருந்துதலுமாகிய பொருள்கட்காகிவரும். எ-டு : தாவில் நன்பொன் தைஇயபாவை (அகம்-212) எனவும் கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றென (குறு-69) எனவும்வரும். இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 346 : | தெவுக் கொளற் பொருட்டே |
(49) |
உரை:தெவு என்னும் குறிப்புரிச் சொல் கொள்ளுதற் பொருட்டாய்வரும் (கொள்ளுதல்-நிரம்புதல்) |
எ-டு : நீர்த்தெவ்வும் நிறைத்தொழுவர் (மதுரை - 90) இச்செய்யுள் அடியுள் தெவும் என்பது தெவ்வும் எனவிகாரமாய் நின்றது. என்னை நீர்த்தெவும் என நிற்பின் அது பாதிரியாய் வஞ்சியோசை பயவாமை அறிக. இது வினைப்போலியாக வரும். இச் சொல் இக்காலத்துத் 'தேவை' எனத்திரிந்து வழங்குகின்றது. |
சூ. 347 : | தெவ்வுப் பகையாகும் |
(50) |
உரை:தெவ் என்னும் குறிப்புரிச்சொல் பகைமை என்னும் பொருட்டாய் வரும். எ-டு : தெவ்வுப்புலம் எனவரும். இது பெயர்ப் போலியாய்த் தனித்துவரும். |