324உரியியல்

சூ. 348 :

விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே
(51)
 

உரை:விறப்பு உறப்பு வெறுப்பு என்னும் குறிப்புரிச் சொற்கள்  செறிவு
என்னும் பொருள் பற்றி வரும்.
 

எ-டு : விறந்த  காப்பொடு  உண்ணின்று வலியுறுத்தும் எனவும், உறந்த
இஞ்சி  உயர்நிலை  மாடத்து  எனவும்,   வெறுத்த    கேள்வி   விளங்கு
புகழ்க்கபிலன் எனவும் வரும். இவை வினைப் போலியாக வரும்.
 

சூ. 349 :

அவற்றுள்

விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும்

(52)
 

உரை:மேற்கூறிய     மூன்றனுள்      விறப்பென்னும்   உரிச்சொல்
செறிவேயன்றி   வெருவுதற்   பொருட்டாயும்  வரும்.   எ-டு : அவலெறி
உலக்கை பாடுவிறந் தயல (பெரும்பாண்-226) எனவரும்.
 

சூ. 350 :

கம்பலை சும்மை கலியே அழுங்கல்

என்றிவை நான்கும் அரவப் பொருள

(53)
 

உரை:கம்பலை,  சும்மை,   கலி,   அழுங்கல்  என்று சொல்லப்படும்
இவை நான்கு இசையுரிச் சொற்களும்  அரவம்   என்னும் பொருளினவாம்,
அரவம்=குழுவொலி=ஆரவாரம்.
 

எ-டு : கம்பலை   மூதூர்  (புறம்-54)  எனவும், கலிகொள் சும்மை ஒலி
கொள் ஆயம் (மதுரை - 264) எனவும்,   கலி   கொள்ளாயம் மலிபுதொகு
பெடுத்த (அகம் - 11) எனவும்,   உயவுப்புணர்ந்   தன்றிவ்  வழுங்க லூரே
(நற் - 203) எனவும்வரும். இவை பெயர்ப்போலியாய் வரும்.
 

சூ. 351 :

அவற்றுள்

அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்

(54)
 

உரை:மேற்கூறியவற்றுள்   அழுங்கல்      என்னும்     உரிச்சொல்
அரவமேயன்றி இரக்கமும் கேடும் ஆகிய பொருள்கட்கும் ஆகி வரும்.
 

எ-டு : பழங்கண்ணோட்டமும்  நலிய அழுங்கினனல்லனோ (அகம்-66)
எனவும்   குணனழுங்கக்   குற்றம்  உழைநின்று   கூறும்   சிறியவர்கட்கு
(நாலடி - 353)  எனவும்  வரும். இவை இப்பொருட்கண் பெயர்வினைகட்கு
முதனிலையாய் வெளிப்படு சொல்லாய் வரும்.