எ-டு : இலம்பா டொக்கற் றலைவற்கோர் கரம்பைச் சீறூர் நல்கின னெனவே (புறம்-285) எனவும், ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர் (புறம் - 327) எனவும் வரும். இவை இரண்டும் பெயர்ப்போலியாய் வரும். இவற்றுள் 'இலம்பாடு' என்பது ஒருசொல். இவ்வுரிச்சொல் 'பாடு' என்னும் இறுதிநிலை கெட்டு இலம் எனப் பண்புக்குறிப்பாய் நின்று படு (படுதல்) என்னும் குறித்துவருகிளவியொடு புணர்ந்து வருதலும் உண்டு என்பதனை "இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலும் உரித்தே செய்யுளான" (எழு.சூ. 316) என விதந்து கூறியதனான் அறிக. |
சூ. 362 : | ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள |
(65) |
உரை:ஞெமிர்தல் பாய்தல் என்னும் குறிப்புரிச்சொற்கள் பரவுதலாகிய பொருளினவாய் வரும். |
எ-டு : தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடு-90) எனவும் புண்ணுமிழ்குருதி முகம்பாய்ந்திழிதர (குறிஞ்சி-172) எனவும் வரும். இவை வினைப்போலியாக வரும். |
சூ. 363 : | கவர்வு விருப்பாகும் |
(66) |
உரை:கவர்வு என்னும் குறிப்புரிச்சொல் விரும்புதல் என்னும் பொருட்காகி வரும். எ-டு: 'கவர்நடைப் புரவி' எனவரும். இதுவும் வினைப் போலியாக வரும். |
சூ. 364 : | சேரே திரட்சி |
(67) |
உரை:சேர் என்னும் குறிப்புரிச்சொல் திரட்சியாகிய பொருள் குறித்துவரும். எ-டு : சேர்ந்துசெறி குறங்கு (நற்-170) திரண்டு செறிந்ததுடை என்பது இதன் பொருள். இது வினைப்போலியாக வரும். |
சூ. 365 : | வியல்என் கிளவி அகலப் பொருட்டே |
(68) |
உரை:வியல் என்னும் குறிப்புரிச்சொல் அகலமாகிய பொருள்குறித்து வரும். எ-டு : "வியலுலகம்" என வரும் (அகலம்-பரப்பு) இது வினைப்போலி. |
| சூ. 366 : | பேம்நாம் உரும்என வரூஉம் கிளவி |
| ஆமுறை மூன்றும் அச்சப் பொருள |
(69) |
உரை:பேம், நாம், உரும் எனக் குறிப்புரிச்சொல்லாய் அம் முறையான் வரும் மூன்றும் அச்சமென்னும் பொருளினவாம். |