சூ. 373 : | கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள |
(76) |
உரை:கறுப்பு-சிவப்பு என்னும் இரண்டும் குறிப்புரிச் சொற்கள். அவை வெகுளுதற் பொருளினவாய் வரும். |
எ-டு : 'நிற்கறுத் தோரரும் கடிமுனை யரண்போல்' (நின்னைவெகுண்டோர் இழக்கும் காவலமைந்தமதிலைப் போல என்பதிதன் பொருள்) எனவும், நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம் (பதிற்-13) எனவும் வரும். இவை வினைப்போலியாக வரும். |
சூ. 374 : | நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப |
(77) |
உரை:மேற்கூறிய கறுப்பு - சிவப்பு என்னும் உரிச்சொற்கள் பண்படியாகத் தோன்றின், நிறமாகிய உருவுணர்த்தற்கும் உரியவாம் என்று கூறுவர் புலவர். |
எ-டு : 'கறுத்த காயா' எனவும், சிவந்த காந்தள் எனவும் வரும். இவை வெளிப்படு சொல்லாயினும் தெரிநிலை வினைக்கு முதனிலையாதற்கண் குறிப்புரிச் சொல்லாயும் குறிப்புவினைக்கு முதனிலையாதற்கண் பண்புரிச் சொல்லாயும் தோற்றம் வேறுபடுதலின் இவ்வாறு வருவனவும் உள என்பதறிவித்தற்கு இவற்றை எடுத்தோதினார் என்க. நிறமுணர்த்தி வரும் கருமை - செம்மை என்னும் பண்புப் பெயர் வேறு. கறுப்பு - சிவப்பு என்னும் இச் சொற்கள் வேறு என அறிக |
சூ. 375 : | நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை |
(78) |
உரை:நொசிவு நுழைவு நுணங்கு என்னும் பண்புரிச் சொற்கள் நான்கும் நுண்மையாகிய பொருள் பற்றி வரும். எ-டு : நொசிமட மருங்குல் (கலி-60) எனவும் நுழைநூற் கலிங்கம் (மலைபடு-561) எனவும் நுணங்குதுகில் நுடக்கம் போல (நற்-15) எனவும் வரும். இவை பெரும்பான்மையும் பெயரடையாக வரும். |
சூ. 376 : | புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே |
(79) |
உரை:புனிறு என்னும் குறிப்புரிச் சொல் (கருவினை) ஈன்ற அணிமைநிலையை உணர்த்திவரும். எ-டு : புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அக-56) எனவரும். இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 377 : | நனவே களனும் அகலமும் செய்யும் |
| (80) |