இதன்கண், சொற்கள் பொருளுணர்த்துந்திறன், 'எண்' என்ற தனிப்பகுப்பைத் தமிழ் நூலார் கொள்ளாததன் விளக்கம், தமிழில் உள்ள படர்க்கைவினை முற்றுக்களின் சிறப்பு, பெயர்ச்சொல் வினைச்சொல் அமைப்பிற்கு இடைச்சொற்களும் உரிச்சொற்களும் உதவும் திறன், அஃறிணை இயற்பெயர் உயர்திணைக்கண் இடுபெயராக அமைதல், எட்டு வேற்றுமைகளின் தோற்றம், ஒவ்வொரு வேற்றுமைக்கும் சிறப்பாக ஒவ்வொரு பொருளே அமைதல், உருபுகளை நோக்காமல் பொருளை நோக்கியே வேற்றுமையை உணர்தல், வினைப்பகுதிகள் ஓசை வேறுபட்டால் பெயராகவும் முன்னிலை ஏவல் வினையாகவும் ஆதல், தெரிநிலை, குறிப்பு வினைகளின் தோற்றம், வியங்கோள் சொல்லமைப்பால் படர்க்கைச்சொல்லாக இருந்தே இருதிணை ஐம்பாற்கும் வருதல், வினையெச்சம் வினை முற்றின் குறை வடிவம் என்பன, இடைச்சொற்கள் ஓரெழுத்தாயும், அசையாயும் சொல்லாயும் வடிவுற்று நிகழ்தல், உரிச்சொற்களின் அமைப்பு, சொற்கள் குறிப்புப்பொருள் பயக்கும் பல்வேறு முறைகளின் விரிவான பட்டியல், தொகைமொழி, தொகைச்சொல் இவற்றின் வேறுபாடு, கிளவி என்ற சொற்பொருள் விளக்கம், ஆகுபெயர் - அன்மொழித்தொகை இவற்றின் வேறுபாடு, கனங்குழை என்பதன் பொருள் விளக்கம் போல்வனவற்றின் நுட்பமான, செய்திகள் தொடக்கத்தில் உளங்கொளற்பாலன இவற்றை நன்கு உளங்கொண்டு நூற்கண் செல்லின் நூல் தன்னைக் கற்போருக்குப் பெருவிருந்தாக உவகை செய்யும். |