நிகழ்தற்குரிய அடிப்படையாகும் கருவி என்னும் ஒரு நிலைமட்டுமே என்பது விளங்க, "வினைமுதற் கருவி அனைமுதற்றதுவே" என்று கூறியதனை ஓராமல் வடமொழியின் தாக்கத்தான் வினைமுதலும் கருவியும் எனப்பிரித்து மயங்கினர். அவ்வாறே மூன்றாம் வேற்றுமைக் கருவியாதற்குரிய பொருள் பலவற்றுள் "அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவி" என்னும் காரணத்தை உடனிகழ்ச்சிப் பொருள் என அமைத்துக் கொண்டனர். |
ஒன்றற்கு மேற்பட்ட பொருள்களை ஓர் எண்ணிக்கையாகக் கூறுதலும் ஒரு வேறுபாட்டினை இரண்டு வேற்றுமைகளுக்கு உரியதாகக் கூறுதலும் அறிவியலுக்கு முரணாவதை அவர் கருதிலர். கருதாமைக்குக் காரணம் தமிழ் இலக்கணம் வடமொழி மரபைப் பின்பற்றியது எனக்கொண்டமையேயாகும். |
அவ்வாறே ஆசிரியர் ஐந்தாம் வேற்றுமைக்குரியதாக "இதனின் இற்றுஇது" என ஒரு பொருளே கூறியிருப்பவும் அதற்கு மாறாக ஏதுப் பொருளையும் 'இன்' என்னும் உவமஉருபுபற்றி வரும் இரண்டாம் வேற்றுமைக்குரிய வினைகளுள் ஒன்றாகிய ஒப்புப் பொருளையும் உறழ்ச்சியுள் ஒருவகையாகிய எல்லையையும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளாகக் கூறிச் சென்றனர். |
வடமொழிக்கு மாறாக - வேறாகத் தமிழிலக்கணம் இருத்தல் இயலாது, இருத்தல் கூடாது என்னும் அழுத்தமான எண்ணம் காரணமாக விளைந்த தடுமாற்றங்களே இவ்வேறுபாடுகளுக்கு ஏது எனலாம். தொல்காப்பிய அமைப்பையும் நெறியையும் நடுவுநிலையோடு நோக்கின் வடமொழியாளர் கூறும் வேற்றுமைக் கொள்கையினின்று தமிழ்மொழியாளர் கொள்கை வேறுபட்டதென்பது விளங்கும். |
4) நான்காம் வேற்றுமை:என்பது எண்பற்றிய பெயர். குவ்வேற்றுமை என்பது உருபுபற்றிய பெயர். கோடற்பொருள் வேற்றுமை என்பது பொருள்பற்றிய பெயர். இது பெரும்பான்மையும் வினையையும் சிறுபான்மை பெயரையும் கொண்டு முடியும். |
5) ஐந்தாம் வேற்றுமை:என்பது எண்ணான் அமைந்த பெயர். இன் வேற்றுமை என்பது உருபான் அமைந்த பெயர். "இதனின்இற்று இது" எனவரும் உறழ்ச்சியாகிய அளவை இதன் பொருள். இடைக்காலத்தார் இதனை எல்லைப் பொருள் வேற்றுமை என்பர். அவ்வாறு கூறுதல் குன்றக் கூறுதலாமாகலின் தொல்லாசிரியன்மார் வாய்பாடே கூறிச் சென்றனர். இது வினை கொண்டு முடியும் இயல்பினது. எல்லைப்பற்றி உறழுங்கால் பெயர் கொண்டு முடியும். |