சொல்லினக் கோட்பாடுகள்11

6) ஆறாம் வேற்றுமை:என்பது  எண்ணான்  எய்திய பெயர். "அது"
வேற்றுமை என்பது உருபான் எய்திய பெயர். கிழமைப்பொருள் வேற்றுமை
என்பது பொருளான் எய்திய பெயர். இது  பெயர்கொண்டு முடியும். ஆறாம்
வேற்றுமைத்   தொடரை    விரிக்குங்கால்    அதன்     வினைத்தன்மை
வெளிப்படுதலன்றி வினை கொண்டு அது முடியாது.
 

ஆறாம்   வேற்றுமைக்கு  வடமொழி  உணர்வு   காரணமாக  அகரம்
பன்மையுருபு என உரையாசிரியன்மார் வலிந்து கூறுவர். பால்காட்டும் இறுதி
இடைச்சொற்களல்லாத  ஏனைய இடைச்சொற்களும் உருபிடைச் சொற்களும்
ஒருமைபன்மை  காட்டுதல்  தமிழ்இலக்கண  நெறியன்று. பிறவிளக்கங்களை
உரையுள் கண்டுகொள்க.
 

7) ஏழாம் வேற்றுமை:என்பது  எண்பற்றிய  பெயர். கண் வேற்றுமை
என்பது   உருபுபற்றிய   பெயர்.   இடக்குறிப்பு   வேற்றுமை    என்பது
பொருள்பற்றிய பெயர்.  இது  பெரும்பான்மையும் வினைகொண்டு முடியும்.
சிறுபான்மை பெயர் கொண்டு முடியும்.
 

இவ்வேற்றுமைகளுள்  பெயர்  கொண்டும்  முடியும் என்றவை எல்லாம்
விரித்துணர்த்துங்கால் வினையொடு கூடிமுடியும்.
 

8) எட்டாம் வேற்றுமை:என்பது  எண்பற்றிய  பெயர். இதற்குத் தனி
உருபு  இல்லை. பெயர்நிலைகளே  உருபின்  தன்மையைக் காட்டி நிற்கும்.
விளிவேற்றுமை என்பது  பொருள்  பற்றிய பெயர். இது பெரும்பான்மையும்
வியங்கோள்  வினையும்  ஏவல்கண்ணியவியங்கோள்  வினையும் கொண்டு
முடியும்.
 

எட்டு  வேற்றுமைகளுள்  தமக்கென  உருபுடையவை   ஆறேயாதலின்
முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் புணர்ச்சி இலக்கணங் கருதிய
தொடர் மொழியமைப்பின்கண் அல்வழியுள் அமையும்.
 

தமிழ்  நூலார்  பொருள்  வேறுபாட்டினை  அடிப்படையாகக் கொண்டு
வேற்றுமைகளை   வகுத்துக்கொண்டமையின்   உருபுகள்    தடுமாறிவரின்
உருபுகளை  நோக்காமல்  பொருளை  நோக்கியே வேற்றுமை உணரப்படும்
என்பர். அதனான் உருபுகள் தடுமாறி வரும் நிலையை உருபுமயக்கம் என்று
கூறி  அவை  எவ்வெவ்வாறு  தடுமாறி  வரும் என்பதனையும் விளக்கினர்.
மற்றும்   வேற்றுமை   நிலையை  எய்துவிக்கும்  பொருள்களுள்ளும்  சில
தடுமாறி  வரும்;  சில  பொருட்கள்  இரண்டு  மூன்று  வேற்றுமைகளைக்
கொள்ளும்   நிலையை    உடையன.    இவற்றையெல்லாம்   வேற்றுமை
மயங்கியலின்கண் விளக்குகின்றது தொல்காப்பியம். இம்மயக்கத்தின்