12சொல்லினக் கோட்பாடுகள்

நுட்பங்களை  ஓராமல்  உரையாசிரியன்மார்  பல இடங்களில் நெறிதடுமாறி
விளக்கங்கூறிச்   சென்றுள்ளனர்.   அவற்றை    ஓரளவிற்கு   வேற்றுமை
மயங்கியலுரையுள்  கண்டு  கொள்க.  எழுவாய்  வேற்றுமையின் மயக்கமே
ஆகுபெயர்  என்னும்  வகையாகும்.  ஆதலின் ஆகுபெயர் இலக்கணத்தை
இவ்வாசிரியர்  வேற்றுமை  மயங்கியலுள்  விரித்தோதுகின்றார்.  இதுபற்றிய
விளக்கம் பின்னர்க் கூறப்படும்.
 

வினைச் சொல்:
 

வினைப்பெயர்  வேறு,  வினைச்சொல்  வேறு. வினைப்பெயர் எனினும்
தொழிற்பெயர்   எனினும்    ஒக்கும்.    தொழிற்   பெயர்கள்   தொழில்
வேறுபாடுகளை  உணர்த்தும்  குறியீட்டுப் பெயர்களாகும். அவை, தல் அல்
கை முதலாய விகுதிபெற்று நிற்குங்கால் ஐயமின்றிப் பெயர் என்பது விளங்க
நிற்கும்.  விகுதியின்றி  உண் தின் செல் கேள் பார் என முதனிலையளவில்
நிற்குங்கால்  அவற்றைப்  படுத்தலோசையாற்கூறின்  அவை  பெயர்களாம்.
முன்னிலைப்   பொருளை   நோக்கி   எடுத்தலோசையாற்கூறின்  வினைச்
சொற்களாம்.
 

வினைச்சொற்கள்  எல்லாம் தொழிற்பெயரின் அடிப்படையிலும் ஏனைப்
பொருட்பெயர்  குணப்பெயர் முதலாயவற்றின் அடிப்படையிலும் தோன்றும்.
தொழிற்பெயர் அடிப்படையிற்றோன்றும் வினைகள் புடைபெயர்ச்சியுடையன
வாகலின்  காலந் தெற்றெனப்  புலப்பட  நிற்கும்.  அவற்றைத்  தெரிநிலை
வினை  என்பார்  உரையாளர்.  ஏனைய   பெயர்களின்   அடிப்படையில்
தோன்றுவன  வெல்லாம்  பொருளின்  தன்மை   இயல்புகளை   விளக்கி
நிற்றலின்  காலந் தெற்றெனப்  புலப்படாமல் குறித்துக்கொள்ளும் நிலையில்
நிற்கும். அதனான் அவற்றைக் குறிப்பு வினை என்பர் நூலோர்.
 

காலம்   உணர்த்துதல்   வினைச்சொல்லுக்குச்  சிறப்பிலக்கணமாதலின்
அதனைக்  காலக்கிளவி  என்னும்  பெயரானும்  வழங்குவர். வினைச்சொல்
பெயர்ப்பொருளை  வேற்றுமை  செய்யும்  கருவியாதலின், அது வேற்றுமை
யடையாது;  உருபேற்காது.  உருபேற்பின்  பெயருள்  ஒருவகையாகிவிடும்.
இதனை,
 

வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்

(வினை-1) [என்றும்]
 

பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே

(வேற்-9)
 

என்றும்,  ஆசிரியர்  விளக்குவர். இவ்வகையை வினையாலணையும் பெயர்
என்பர்.