குறிப்புவினைச் சொற்கள் ஒரு பொருளின் பொருளுரிமை இடஉரிமை பற்றியும் நிறம், குணம் முதலிய பண்புபற்றியும் ஒப்பிட்டுக் கூறும் நிலை பற்றியும் தோன்றும். அவை பொன்னன், கண்ணன், மலையன், ஊரன், ஆதிரையான், ஓணன், கரியன், நெடியன், நல்லன், தீயன், அன்னன், இன்னன் எனவரும். இத்தகையன மூன்று காலத்திற்கும் பொதுவாக நின்று கூறுவோனது குறிப்பான் ஒருகாலத்திற்குரியவாய் அடங்கும். இக் குறிப்பு வினைகள் பெயர்நிலைமை எய்தி உருபேற்பின் அவை குறிப்பு வினையாலணையும் பெயர் எனப்படும். | எனவே, பொன்னன் என்னும் ஒரு சொல் பொருட்பெயராயும் (இடுபெயர்) குறிப்புவினைமுற்றாயும், வினையாலணையும் பெயராயும் வருதற்கு ஒக்குமாகலின் இடமும் காலமும் கூறுவோனது குறிப்பும் நோக்கி அவற்றை வரையறை செய்து கொள்ளல் வேண்டும். குறிப்புவினைமுற்று வினையாலணையும் பெயராதற்கண் காரணப் பெயராகிவிடும். | தெரிநிலையும் குறிப்புமாக வரும் இவ்வினைச் சொற்களும் உயர்திணைவினை, அஃறிணைவினை இருதிணைக்கும் பொதுவாய் நிற்கும் விரவுவினை என மூவகையாக அமையும். பொது வினைகள் முன்னும் பின்னும் வரும்; சிறப்புப் பெயர் சிறப்பு வினைகளான் பொதுமைநீங்கி இருதிணையுள் ஒன்றன்பாற்பட்டு அடங்கும். | தெளிவாகத் திணைபாலுணர்த்துவன தன்மைவினையும் படர்க்கை வினையுமாம். முன்னிலைவினை, வியங்கோள்வினை, வினையெச்சவினை, இன்மை உணர்த்தும் வினைச்சொல், வேறு என்னும் வினைச்சொல், செய்ம்மன என்னும் வாய்பாட்டு முற்று வினைச்சொல், செய்யும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சக் கிளவிகள் ஆகிய இவை இருதிணைக்கும் பொதுவாய் வரும். இவற்றுள் முன்னிலைவினை ஒருமைப்பால் பன்மைப்பால் உணர்த்தும். | வியங்கோள்வினை சொல்லமைப்பான் படர்க்கைச் சொல்லாகவே நின்று இருதிணை ஐம்பாலினும் மூவிடத்தும் வரும். யான் வாழ்க, நீ வாழ்க, அவன் வாழ்க, அவள் வாழ்க, அவர் வாழ்க, அது வாழ்க, அவை வாழ்க. என வாழ்க என்பது வடிவு ஒன்றுபட்டுப் படர்க்கைச் சொல்லாயே நிற்கும். தன்மைச் சொல்லாகவும் முன்னிலைச் சொல்லாகவும் திரிந்து நில்லாது. அதனான், |
|
|