"தன்மை முன்னிலைஆயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி" |
(வினை-29) |
என ஆசிரியர் அதன் சொல்லமைப்பைத் தெளிவுபடுத்தினார். இச்சூத்திரத்தின் செம்பொருளை ஓர்ந்துணராத உரையாசிரியன்மாரும் அவர் உரைவழி மயங்கிய ஆய்வாளர் பலரும் வியங்கோட்பொருள் தன்மைக்கும் முன்னிலைக்கும் வராதென விபரீதப் பொருள் கொண்டு தம்முள் முரண்பட விளக்கங்கூறிச் சென்றனர். |
வினையெச்சம் பெயரெச்சம் என்பவை முற்றி நில்லாத குறைச்சொற்களாகும். அஃதாவது பாலுணர்த்தும் இறுதி இடைச்சொல் குறைந்து நிற்பனவாம். அவை முறையே பிறிதொரு வினை முற்றொடும் பெயரொடும் சென்று முடிவுறும். வினை எச்சம் என்பது வினைமுற்றின் குறை வடிவம். பெயரெச்சம் என்பது வினையாலணையும் பெயரினது குறைவடிவம். |
வினையெச்சம் காலமுணர்த்தும் நிலைமையானும் காரண காரியமுறைமையானும் செய்து, செய்பு, செய்யூ, செய்தென, செய்யியர், செயின், செய, செயற்கு என வாய்பாட்டு முறையானும், முன் பின் கால் கடை வழி இடத்து என்னும் இறுதிநிலை இடைச்சொல் முறையானும் வகுத்து ஓதப்படுகின்றது. வினையெச்சத்தை முடிக்கும் சொல் வினைமுற்றாயும் பிறிதொரு எச்ச வினையாயும் இருக்கும். சிறுபான்மை ஆக்கச்சொல் தொக்க தொழிற்பெயராயுமிருக்கும். |
பெயரெச்சம் காலமுணர்த்தும் நிலையான் செய்யும், செய்த என்னும் இருவகை வாய்பாட்டு முறையில் வரும். செய்யும் என்பது நிகழ்வு எதிர்வு என்னும் இருகாலத்திற்கும் உரித்தாகவரும். செய்த என்பது இறந்தகாலமுணர்த்திவரும். செய்யுமென்னும் முற்றும் செய்யுமென்னும் எச்சமும் வேறுவேறாகும். முற்றுச்சொல் தன்மை, முன்னிலை பல்லோர் படர்க்கைக்கண் வாராது. எச்சம் யாண்டும் வரும். பிற விளக்கங்களை உரையுட் கண்டு கொள்க. |
விரைவு தெளிவு இயற்கை ஆகிய நிலைபற்றிச் சொல் நிகழ்த்துங்கால் தம் பொருள்திரிபுறாமல் வினைமுற்றுச் சொற்கள் காலம் மயங்கியும் வரும். முற்றுவினைகள் எச்சமாகவும் வரும். வினைஎச்சச்சொல் பல்வேறு குறியினதாகவரும். வினைமுற்றுக்கள் காலமும் இடமும் நோக்கி ஒவ்வொன்றும் ஆறுவகைப்படும். |
வினைச் சொற்கள் யாவும் பெயரைக் கொண்டே முடியும். மாரீற்று வினைமுற்றும் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் வினையொடும் முடியும். |