இடைச்சொற்கள் பெயர் வினைகட்கு உறுப்பாயும் அவற்றைச் சார்ந்தும் அவற்றிற்கு அடையாயும் வரும். சில பெயர்ப்போலியாயும் வினைப்போலி யாயும் வரும். அன் ஆன் முதலிய இறுதி இடைச் சொற்கள், மலையன், சேரமான், உண்டனன், நடந்தான் எனப்பெயருக்கும் வினைக்கும் பொதுவாயும் உறுப்பாயும் வந்தன. நடந்தனன் என்பதில் அன் சாரியையாக வந்தது. அதன்கண் 'ந்த்' காலஇடைநிலையாக நின்றது. பொன்னனை, பொன்னனொடு என வேற்றுமை உருபாயும் கொன்னூர், வருகதில், அவனே செய்தான் என முன்னும்பின்னும் அடையாகவும் வந்தன. மதிபோலும் முகம், புலியன்ன பாய்ச்சல் என உவம உருபுகளாக வினைப்போலியாக வந்தன. பிறபொருள் பற்றி ஆங்கு, அங்ஙனம் எனப்பெயர்ப்போலியாக வந்தன. [போலி = போன்று] |