இயற்சொல்-திரிசொல்-திசைச்சொல்-வடசொல் |
இவற்றைச் செய்யுளீட்டச்சொல் என்பார் தொல்காப்பியர். உரையும் பாட்டுமாக நிகழும் எழுவகைச் செய்யுளும் எழுத்துமொழி இலக்கியமாக நிகழுங்கால் வட்டார வழக்கும் அயல்மொழி வழக்கும் பற்றிப் பெயர்ச்சொல் முதலாய நால்வகைச் சொல்லையும் வகைப்படுத்தி அறிந்துணர்தற்கும் இலக்கியங்களைப் படைத்தற்கும் உரிய நெறியை விளக்குதலே இப்பாகுபாட்டின் கருத்தாகும். |
இவற்றுள் முதல் மூன்றும் தமிழ் மொழிக்கே உரிய சொற்கள். வடசொல் என்பது தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்துக்களானமைந்த இருமொழிக்கும் உரிய பொதுச் சொற்களும், சிறுபான்மை ஆரியத்திற்கே உரிய சொல்லைத் தமிழ் எழுத்துக்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட சொற்களுமாம். |
இங்ஙனம் வட சொற்களையும் இலக்கியத்திற் சேர்த்துக் கொள்ளப்பெற்றமைக்குக் காரணம் அவற்றின் மூலப்பகுதி தமிழாக இருத்தலானும் வானியற்கலையையும், சமய மெய்ப்பொருள் கல்வியையும் இருமொழியாளரும் பொதுவாகக் கொண்டமையானுமாம். அதனான் இந்நூலுள்ளும் சூத்திரம், அதிகாரம், காண்டிகை, உத்தி, ஆதி, அந்தம் முதலிய சொற்களை ஆசிரியர் வழங்குவாராயினார். நாட்பெயர், திங்கட் பெயர் முதலியனவும் அம்முறைமையான் அமைந்தனவேயாம். பிற விளக்கங்களை எச்சவியலுரையுட் கண்டு கொள்க. |
வெளிப்படைச் சொல்-குறிப்புச் சொல்: |
மேற்கூறிய செய்யுளீட்டச்சொல் நான்கும் வெளிப்படை, குறிப்பு என இருநிலைமையவாய்ப் பொருளுணர்த்தும். இதனைத், |
"தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் |
இருபாற் றென்ப பொருண்மை நிலையே" (பெய-3) |
என விளம்புவார் ஆசிரியர். |
மொழி என்பது மக்கள் தம் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கருவியாகும். சிலகருவிகளைக் கொண்டு பல்வேறு பொருள்களை ஆக்கிக் கொள்ளுதல் போலச் சில சொற்களைக் கொண்டே மக்கள் தம் சிந்தனையைப் புலப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளனர். அதனான் ஒரு சொல் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பப் பல்வேறு பொருள்களை உணர்த்தும் மரபினைப் பெற்றுவிடுகின்றது. அம்முறைமையான் |