சூ. 4 : | பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின |
| ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் |
| தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் |
| இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே |
| உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். |
[4] |
க-து: | உயர்திணையுள் பாலுள் அடங்காத ஆண்மை திரிந்த பொருட் பெயர்க்கும் திணையுள் அடங்காத தெய்வஞ்சுட்டிய பெயர்க்கும் ஆவதொரு மரபு கூறுகின்றது. |
| |
உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும். |
பொருளை உள்ளடக்கிய சொற்களைப் பற்றியே ஆசிரியர் இலக்கணங் கூறிவருகின்றாராகலின் பொருளின் திரிபைச் சொல் மேலேற்றி "ஆண்மை திரிந்த, பெண்மை சுட்டிய பெயர்நிலைக் கிளவி" என்றார். பயனிலையாகிய முடிவு காட்டுவன சொற்களேயாகலின், இவ்வாறே 'தன்மை திரிபெயர்' என மேலுங்கூறுவார். அந்தம் என்றது ஈற்றினின்றிசைக்கும் இடைச்சொல்லைப், 'பிரிந்து' என்றது வகைப்பட்டு என்றவாறு. இசைக்கும் என்றது அறியும்வண்ணம் நிகழும் என்றபடி. 'உயர்திணை மருங்கிற்பால் பிரிந்திசைக்கும் எனப் பொதுப்படக் கூறினாராயினும், |
"ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி |
ஆண்மை யறிசொற் காகிட னின்றே" |
என்றும் |
ஆண்மையும் பெண்மையுமின்றித் திரிந்து நின்றதைத் "தன்மை திரி பெயர்" என்றும் மேற்கூறுகின்றமையின் ஆண்மைதிரிந்து பெண்மை சுட்டிய பெயர் மகடூஉவிற்கும் பல்லோருக்கும் உரிய ஈறுகளானும் தெய்வஞ்சுட்டிய பெயர் ஆடூஉ, மகடூஉ, பல்லோர் ஆகிய மூன்றிற்கும் உரிய ஈறுகளானும் இசைக்குமெனக் கொள்க. தன்மைதிரிபெயர் அஃறிணையாய் இசைக்கும் என மேற்கூறுவார். |
எ.டு. பேடிவந்தாள், பேடியர்வந்தனர், பேடுவந்தாள், பேடர் வந்தனர். பேடி அவர், பேடியர் அவர் என்றும் தேவன் வந்தான். தேவி வந்தாள், தேவர் வந்தனர், சேயோன் அருளினான், செய்யவள் அருளினாள், புத்தேளிர் வந்தனர், தேவன் அவன், தேவி அவள், தேவர் அவர் என்றும் வரும். |